குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் வளாகத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் வளாகத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன.
சின்னமனூர்,
சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சி உள்ளது. இங்கு உள்ள சுரபி நதிக்கரையில் சனீஸ்வர பகவான் தனி கருவறையில் சுயம்புவாக வீற்றிருப்பது இக்கோவிலின் சிறப்பு ஆகும். இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
மேலும் சுற்றுலா துறையின் சார்பில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கோவிலில் வளர்ச்சி பணிகளும், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குச்சனூரை சேர்ந்த ஒருவர் 2 ஆயிரத்து 214 சதுர அடியில் கோவில் வளாகத்தினை ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்துள்ளார். இவர் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை காலி செய்யுமாறு கோவில் நிர்வாகத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டும் அதனை காலி செய்யாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம் தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடந்தது. இதையொட்டி நேற்று ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. அப்போது உத்தமபாளையம் மண்டல துணை தாசில்தார் நசீர், தக்கார் பாலகிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணவேணி மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
சின்னமனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராஜ்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.