40,551 மாணவ, மாணவிகள் எழுதினர்

சேலம் மாவட்டத்தில் நேற்று தொடங்கிய பிளஸ்-2 தேர்வை 40 ஆயிரத்து 551 மாணவ, மாணவிகள் எழுதினர்.

Update: 2018-03-01 23:00 GMT
சேலம்,

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 19,599 மாணவர்களும், 21,235 மாணவிகளும் என மொத்தம் 40,834 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். தமிழ் முதல்தாள் தேர்வினை 19,494 மாணவர்கள், 21,057 மாணவிகள் என மொத்தம் 40,551 பேர் எழுதினர். 105 மாணவர்கள், 178 மாணவிகள் உள்பட 283 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்விற்காக மாவட்டம் முழுவதும் 121 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தனித்தேர்வர்கள் 459 பேர் எழுதினர்.

தேர்வையொட்டி மாணவ, மாணவிகள் பலர் காலை 8 மணி முதலே அந்தந்த தேர்வு மையத்துக்கு வரத்தொடங்கினர். முன்னதாக அவர்களில் பலர் பெற்றோரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். மேலும் பல மாணவ, மாணவிகள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தனர்.

ஒரு சில பள்ளிகளில் தேர்வு தொடங்குவதற்கு முன்பாக பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் வரிசையாக நின்று அதிக மதிப்பெண் எடுக்க வேண்டி இறைவனை பிரார்த்தனை செய்தனர். சில பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு தேர்வு குறித்து அறிவுரைகள் வழங்கினர். முன்னதாக மாணவ, மாணவிகள் தேர்வு தொடங்கும் முன்பு பாடம் படித்துக்கொண்டு இருந்தனர்.

தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு தேர்வு மையங்களுக்கு அவ்வப்போது சென்று கண்காணித்தனர். இதுதவிர, தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் தேர்வு மையங்களின் நுழைவு வாசலில் ‘இது தடை செய்யப்பட்ட பகுதி‘ என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவிகள் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதினர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சில கைதிகள் சென்னை புழல் சிறையில் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களில் ஒன்றான கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ரோகிணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் ரோகிணி கூறியதாவது:-

பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. மாணவ, மாணவிகள் ‘நீட்’ தேர்வினை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களிலும் பயிற்சி மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

மேலும் செய்திகள்