நாகர்கோவில் அருகே பரிதாபம் வடமாநிலத்தை சேர்ந்த கர்ப்பிணி தற்கொலை

நாகர்கோவில் அருகே வடமாநிலத்தை சேர்ந்த கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.

Update: 2018-03-01 23:15 GMT
மேலகிருஷ்ணன்புதூர்,

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அலோக் மாலிக். இவர் நாகர்கோவில் அருகே தெங்கம்புதூர் பகுதியில் தங்கியிருந்து வலை கம்பெனி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மமாலி (வயது 18) என்பவரை திருமணம் செய்து கொண்டார். தெங்கம்புதூர் பகுதி கலைஞர் காலனியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அவர்கள் குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் பகல் 11.30 மணிக்கு அலோக் மாலிக், தன்னுடைய மனைவி மமாலியை ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சிங்களேயர்புரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு மமாலிக்கு உடல்நலம் சரியில்லை என்றும், அவருக்கு சிகிச்சை அளிக்கும்படியும் கூறியுள்ளார். மமாலியை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து மமாலி சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து தெங்கம்புதூர் கிராம நிர்வாக அதிகாரி கோபிகா, சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால், சப்-இன்ஸ்பெக்டர் லைசா ஆகியோர் அலோக் மாலிக்கை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்த அலோக் மாலிக், இறுதியில் தனது மனைவி மமாலி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்த போது அவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் இதுதொடர்பாக போலீசிடம் அளித்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

நானும், மமாலியும் காதலித்து வந்தோம். இந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் மமாலியை என்னுடன் அழைத்துக் கொண்டு ஒடிசாவில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்துவிட்டேன். பிறகு அவரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தினேன்.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் பேசக்கூடாது என்று மமாலியிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் என்னுடைய பேச்சை கேட்கவில்லை. இதனால் அவர் மீது எனக்கு கோபம் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

அதேபோல் மீண்டும் தகராறு ஏற்பட்ட போது மமாலி திடீரென தூக்கில் தொங்கிவிட்டார். அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்த போது இறந்து விட்டார்.

இவ்வாறு அவர் போலீசிடம் கூறியுள்ளார்.

இதற்கிடையே ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மமாலியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர், 4 மாத கர்ப்பிணியாக இருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார், ஒடிசா மாநிலத்தில் மமாலி வசிக்கும் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அலோக் மாலிக் மீது அந்த போலீஸ் நிலையத்தில் மமாலியை கடத்திச் சென்று விட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. மமாலியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் அந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மமாலி தற்கொலை பற்றிய தகவலையும் சுசீந்திரம் போலீசார், ஒடிசா மாநில போலீசாருக்கு தெரிவித்தனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மமாலியின் உடல் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் இருந்து மமாலியின் குடும்பத்தினர் வந்த பிறகு உடல் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.

கணவருடன் ஏற்பட்ட தகராறில் வடமாநிலத்தை சேர்ந்த கர்ப்பிணி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்