தூத்துக்குடியில் சுங்கத்துறை பாதுகாப்பில் இருந்த ரூ.5 கோடி செம்மரக்கட்டைகள் திடீர் மாயம்

தூத்துக்குடியில் சுங்கத்துறை பாதுகாப்பில் இருந்த ரூ.5 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-03-01 20:45 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் சுங்கத்துறை பாதுகாப்பில் இருந்த ரூ.5 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செம்மரக்கட்டைகள்


தூத்துக்குடி துறைமுகம் வழியாக கடந்த 2013-ம் ஆண்டு வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த சுமார் 15 டன் செம்மரக்கட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த கட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகள் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

அதனையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில் அந்த செம்மரக்கட்டைகள், தூத்துக்குடி துறைமுக பைபாஸ் ரோட்டில் உள்ள, சுங்கத்துறையின் அனுமதி பெற்ற தனியார் சரக்கு பெட்டக முனையத்தில், ஒரு சரக்கு பெட்டகத்தில் வைத்து சீல் செய்யப்பட்டது. அங்கு அந்த பெட்டகம் பாதுகாக்கப்பட்டு வந்தது.

திடீர் மாயம்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சரக்கு பெட்டகத்தை சுங்கத்துறை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அப்போது கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. அந்த சரக்கு பெட்டகத்தில் இருந்த 15 டன் செம்மரக்கட்டைகளும் மாயமாகி இருந்தன. அதற்கு பதிலாக அங்கு வெறும் மரத்தூள் மற்றும் வைக்கோல் மட்டுமே இருந்தது. மாயமான செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.5 கோடி இருக்கும். இதுகுறித்து அந்த தனியார் சரக்கு பெட்டக முனையத்தினரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுங்கத்துறை அதிகாரிகளின் பாதுகாப்பில் இருந்த ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் திடீரென மாயமான சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்