திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 14,392 பேர் எழுதினர்

திருவாரூர் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 392 பேர் நேற்று பிளஸ்-2 தேர்வு எழுதினர். தேர்வு எழுதியவர்களில் மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது.

Update: 2018-03-01 22:45 GMT
திருவாரூர்,

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற தமிழ் முதல் தாள் தேர்வை திருவாரூர் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 136 மாணவர்கள், 8 ஆயிரத்து 256 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 392 பேர் எழுதினர். பிளஸ்-2 தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 50 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வு மையங்களில் குடிநீர், தடையில்லா மின்சார வசதி செய்யப்பட்டு இருந்தது. மாவட்டம் முழுவதும் உள்ள 67 அரசு பள்ளிகள் உள்பட 113 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

தேர்வு மையங்களில் 50 முதன்மை கண்காணிப்பாளர்கள், 50 துறை அலுவலர்கள், 25 கூடுதல் துறை அலுவலர்கள், 750 அறை கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பறக்கும் படை

அதேபோல 95 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, தேர்வு அறைகள் கண்காணிக்கப்பட்டன. மாற்றுத்திறனுடைய மாணவ-மாணவிகள் சிறப்பு ஆசிரியர்களின் உதவியுடன் தேர்வு எழுதினர். திருவாரூர் மாவட்டத்தில் மாணவர்களை விட 2 ஆயிரத்து 120 மாணவிகள் அதிகமாக தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்