பழுதாகி நடுவழியில் நிற்கும் அரசு பஸ்கள்

மாவட்டத்தில் அரசு பஸ்கள் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நிற்பதால் பயணிகள் கடும் தவிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

Update: 2018-03-01 22:00 GMT
திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டத்தில் ஓடும் அரசு பஸ்களில் பாதிக்கும் மேற்பட்டவை தகரடப்பா வண்டிகளாகவே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் போதிய பராமரிப்பு இல்லாததால் அவை நடுவழியில் பழுதாகி நிற்கின்றன. இதனால் அவற்றில் பயணம் செய்யும் பயணிகள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியாமல் கடும் தவிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். மாவட்டத்தில் சிவகங்கை, திருப்பத்தூர் உள்பட 5 பணிமனைகள் உள்ளன. இவற்றில் 300-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இவற்றில் 200 பஸ்கள் பழுதாகிய நிலையிலேயே இயக்கப்படுகின்றன. பஸ்களின் டயர்களும் மிகவும் தேய்ந்த நிலையிலேயே உள்ளன. இதனால் அவை சிறு முள் குத்தினாலும் பஞ்சராகி விடுகின்றன. எனவே பஸ்களை சரியாக பராமரித்து இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து காரைக்குடிக்கு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது.

ஆனால் பஸ் புறப்பட்டுச் சென்ற சிறிது தூரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் பழுதாகி நின்றது. பழுதை சரிசெய்ய ஓட்டுனர் முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.

பஸ் நடுரோட்டில் நின்றதால் பயணிகள் சுமார் ஒருமணி நேரம் காத்திருந்தனர். பின்னர் பணிமனையில் இருந்து மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு பயணிகள் ஏறிச் சென்றனர்.

இதேபோன்று திருப்பத்தூர் பணிமனைக்கு உட்பட்ட பஸ்கள் பழுதாகிய நிலையிலேயே உள்ளன. பஸ் கட்டணத்தை உயர்த்திய அரசு, அவற்றை உரிய செலவு செய்து பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்