காஞ்சி சங்கர மட வளாகத்தில் ஜெயேந்திரர் உடல் அடக்கம் இறுதிச்சடங்கில் கவர்னர் கலந்து கொண்டார்

காஞ்சி சங்கர மட வளாகத்தில் ஜெயேந்திர சரசுவதி சுவாமிகளின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார்.

Update: 2018-03-01 23:15 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சி சங்கர மடத்தின் 69-வது மடாதிபதியான ஜெயேந்திர சரசுவதி சுவாமிகளுக்கு நேற்று முன்தினம் அதிகாலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவர் காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காததால் காலை 8.10 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

பின்னர் ஜெயேந்திரரின் உடல், பக்தர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக காஞ்சி சங்கர மடத்தில் வைக்கப் பட்டது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் இறந்த செய்தி கேள்விப்பட்டதும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சங்கர மடத்துக்கு திரண்டு வந்து, நீண்ட வரிசையில் நின்று அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, நேற்று காலை 8 மணி அளவில் ஜெயேந்திரரின் உடல் அவரது அறையில் இருந்து சங்கர மடத்தில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன. புரோகிதர்கள் மந்திரங்களை ஓத இறுதிச்சடங்குகள் நடை பெற்றன.

ஜெயேந்திரர் உடலுக்கு இளைய மடாதிபதி விஜயேந்திரர் ‘பிருந்தாவன பிரவேச காரிய கிரமம்’ என்று கூறப்படும் இறுதிச்சடங்குகளை செய்தார். பால், தேன், பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் ஜெயேந்திரரின் உடலுக்கு அவர் அபிஷேகம் செய்தார். மேலும், சாளகிராமம் எனப்படும் புனித கல் ஜெயேந்திரரின் தலையில் வைக்கப்பட்டு, அதன் மீது கங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய மந்திரிகள் சதானந்த கவுடா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மத்திய மந்திரி ஜாபர் ஷெரீப் ஆகியோர் கலந்து கொண்டு ஜெயேந்திரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி சார்பிலும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் நித்தியானந்தா சுவாமிகள், காஞ்சி சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தலைவர் டாக்டர் வி.வி.குமாரகிருஷ்ணன், கல்லூரி செயலாளர் டாக்டர் வி.பி.ரிஷிகேசன், கல்லூரி முதல்வர் டாக்டர் கே.ஆர்.வெங்கடேசன், ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வேந்தர் ஜெயராம ரெட்டி, துணை வேந்தர் விஷ்ணுபோத்தி உள்பட பலரும் ஜெயேந்திரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இறுதிச்சடங்கில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முஸ்லிம்களும் கலந்து கொண்டனர்.

இறுதிச்சடங்கு நிகழ்ச்சியின் போது திருப்பதி வெங்கடாசலபதி, காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள், குமரகோட்டம் முருகர், சிதம்பரம் நடராஜர் போன்ற பல்வேறு கோவில்களில் இருந்து கொண்டுவரப்பட்ட பிரசாதங்கள், மாலைகளும், நேபாள மன்னர் மற்றும் தஞ்சை மன்னர் குடும்பத்தின் சார்பில் கொண்டுவரப்பட்ட மாலைகளும் ஜெயேந்திரரின் பாதத்தில் வைக்கப்பட்டன.

இறுதிச்சடங்கு நிகழ்ச்சி முடிந்ததும் ஜெயேந்திரரின் உடலில் காஞ்சி சங்கரமட வளாகத்தில் உள்ள பிருந்தாவனம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மகாபெரியவர் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகளின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகே ஜெயேந்திரரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதற்காக அங்கு குழி தோண்டப்பட்டு இருந்தது. ஜெயேந்திரரின் உடலை பெரிய மூங்கில் கூடையில் அமரவைத்து குழிக்குள் வைத்து அடக்கம் செய்தனர். குழிக்குள் நவரத்தினங்கள், மூலிகைகள், உப்பு, சந்தன கட்டைகள் ஆகியவை வைக்கப்பட்டன. ஜெயேந்திரர் ஆரம்பகாலத்தில் இருந்து பக்தர்களுக்கு குங்கும பிரசாதம் வழங்க பயன்படுத்தி வந்த சந்தனத்தினால் ஆன இருக்கையும் அதனுள் வைக்கப் பட்டது.

முன்னதாக, ஜெயேந்திரர் கபாலமோட்சம் அடைந்ததை குறிக்கும் வகையில் அவரது தலையில் தேங்காய் வைத்து உடைக்கப்பட்டது.

ஜெயேந்திரரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் துளசி மாடம் வைக்கப்பட்டது.

ஜெயேந்திரரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை பக்தர்கள் காண்பதற்கு வசதியாக, சங்கர மடத்துக்கு வெளியே 3 இடங் களில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றின் மூலம் இறுதிச் சடங்கு காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. 

மேலும் செய்திகள்