அரளிப்பாறை மஞ்சுவிரட்டு 500 காளைகள் சீறிப்பாய்ந்தன

சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் மாசிமக திருவிழாவையொட்டி பாரம்பரிய முறைப்படி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 500 காளைகள் சீறிப்பாய்ந்தன.

Update: 2018-03-01 21:30 GMT
சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே உள்ளது அரளிப்பாறை. இங்கு அரவன்கிரி மலை உச்சியில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிமக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த திருவிழாவையொட்டி நடைபெறும் மஞ்சுவிரட்டு புகழ்பெற்றது. சுமார் 1,000 ஆண்டுகளாக அரளிப்பாறையில் பாரம்பரிய முறைப்படி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டு வருகிறது. குன்றக்குடி ஆதினத்திற்கு உட்பட்ட அரளிப்பாறை அரவன்கிரி மலை பாலதண்டாயுதபாணி கோவிலில் மல்லை மங்கலம், சதுர்வேத மங்கலம், கண்ணமங்கலம், சேத்தமங்கலம், வேலமங்கலம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய ஐந்துநிலை நாட்டார்களால் திருவிழா கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தநிலையில் திருவிழாவின் 10-ம் நாளான நேற்று கோவிலில் விசேஷ பூஜைகள் நடைபெற்றன.

இதனைத்தொடர்ந்து அரளிப்பாறையில் பாரம்பரிய முறைப்படி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முன்னதாக அரளிப்பாறை மலையை சுற்றி ஆயிரக்கணக்கானோர் கூடி நிற்க ஐந்துநிலை நாட்டார்கள் வேட்டி எடுத்து வந்து கோவில் காளைகளுக்கு அணிவித்தனர். பின்னர் கோவில் காளைகள் பாரம்பரிய முறைப்படி ஊர்வலமாக அழைத்துவரப்பட்டன. பின்னர் தொழுவத்தில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு மஞ்சுவிரட்டு தொடங்கியது. அதனைத்தொடர்ந்து வாடிவாசல் வழியாக மஞ்சுவிரட்டு காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்த காளைகளை போட்டியில் கலந்துகொண்ட மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் அடக்க முயன்றனர். இந்த மஞ்சுவிரட்டில் சில காளைகள் பிடிபட்டன. மற்ற காளைகள் மாடுபிடி வீரர்களுக்கு போக்கு காட்டிவிட்டு தப்பின.

மஞ்சுவிரட்டில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட 500 காளைகள் சீறிப்பாய்ந்தன. முடிவில் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. இந்த மஞ்சுவிரட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 42 பேர் காயமடைந்தனர்.

மேலும் செய்திகள்