பில்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு: துள்ளிக்குதித்த காளைகள் முட்டியதில் 30 பேர் காயம்

பில்லமநாயக்கன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் துள்ளிக்குதித்த காளைகள் முட்டியதில் 30 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2018-02-28 22:00 GMT
வடமதுரை,

வடமதுரை அருகே உள்ள பில்லமநாயக்கன்பட்டியில் ஸ்ரீகதிர் நரசிங்கபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக வாடிவாசல், கேலரி (பார்வையாளர்கள் இருக்கை), தடுப்புகள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வந்தது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே உள்ள திடலில் நடந்த ஜல்லிக் கட்டை ஆர்.டி.ஓ. (பொறுப்பு) ஜான்சன் தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து வாடி வாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. முன்னதாக காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக் கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டில் பங்கேற்க 585 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதில் 405 காளைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

இதேபோல் காளைகளுடன் மல்லுக்கட்ட 407 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 391 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். திண்டுக்கல் மட்டுமின்றி திருச்சி, தேனி, மதுரை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன. காளைகளை அடக்க இளைஞர்கள் போட்டி போட்டனர். சில காளைகள் வீரர்கள் பிடியில் சிக்காமல் துள்ளிக்குதித்து சென்றன. சில காளைகளை இளைஞர்கள் அடக்கினர்.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கக்காசு, வெள்ளிக் காசு, பீரோ, கட்டில், சைக்கிள், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் பார்வையாளர் ம.மு.கோவிலூர் பகுதியை சேர்ந்த இந்திரகுமார் (வயது 23), மாடுபிடி வீரர்களான புகையிலைப்பட்டியை சேர்ந்த லியோ (32), தவசிமடையை சேர்ந்த சவேரியா வேளாங் கண்ணி (21), அலங்காநல்லூரை சேர்ந்த பெரியகங்கை (26) உள்பட 30 பேர் காயமடைந்தனர்.

காயம் அடைந்தவர்களுக்கு ஏற்கனவே தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர், சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயம் அடைந்த 4 பேர் மேல்சிகிச்சைக்காக திண்டுக் கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காத வண்ணம் தடுக்க திண்டுக்கல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்