லால்குடி பகுதியில் சம்பா நெல் அறுவடை பணிகள் தீவிரம் விவசாயிகள் மகிழ்ச்சி

2 ஆண்டுகளுக்கு பின்னர் லால்குடி பகுதியில் சம்பா நெல் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2018-02-28 22:30 GMT
திருச்சி,

திருச்சி மாவட்டம் லால்குடி, சமயபுரம் பகுதிகளில் காவிரியின் கிளை வாய்க்கால்களான பெருவளை மற்றும் புள்ளம்பாடி வாய்க்கால்கள் மூலம் பாசனம் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 2-ந்தேதி இந்த வாய்க்கால் களில் தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டது. சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெல் கதிர் முற்றி தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கதிர் அறுவடை செய்யும் எந்திரங் களின் உதவியுடன் விவசாயிகள் இந்த பணியை செய்து வருகிறார்கள்.

2 ஆண்டுகளுக்கு பின்னர்...

லால்குடி அருகே உள்ள மகிழம்பாடி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் நெல் அறுவடை பணி தொடர்பாக கூறுகையில் ‘கடைமடை பகுதி தவிர மற்ற இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற் பயிர்கள் தற்போது அறுவடை கண்டு வருகிறது. கடந்த ஆண்டு சாகுபடி செய்யவில்லை. அதற்கு முந்தைய ஆண்டும் அறுவடைக்கு முன்பாக தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருகிபோய் விட்டது. எனவே 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு தான் அறுவடை கண்டு உள்ளோம். ஏக்கருக்கு 50 முதல் 60 மூட்டை மகசூல் கிடைக்கும் என வேளாண் அதிகாரிகள் கூறியதால் 120 நாள் பயிரான தன்வி என்ற விதை நெல்லை வாங்கி சாகுபடி செய்தோம். ஆனால் தற்போது ஏக்கருக்கு 40 மூட்டை தான் கிடைத்து உள்ளது. செய்த செலவுகளுக்கு இந்த மகசூலால் எங்களுக்கு லாபம் இல்லை என்றாலும் நெல் அறுவடை செய்வது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது’ என்றார். 

மேலும் செய்திகள்