குன்றத்தூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது

குன்றத்தூர் அருகே கழுத்தை அறுத்து ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-02-28 23:15 GMT
பூந்தமல்லி,

குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினம் (வயது 22). பிரபல ரவுடியான இவர் மீது சோமங்கலம், மணிமங்கலம், குன்றத்தூர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் பழந்தண்டலம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் ரத்தினம், கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். குன்றத்தூர் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருப்பது தெரியவந்தது. போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கருணா (23), கருணாகரன் (24), அப்பு (23), தனசேகர் (26), விஜய் (20), சங்கர் (24) ஆகிய 6 பேரை குன்றத்தூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

கொலையான ரவுடி ரத்தினத்துக்கும், பக்கத்து தெருவில் வசித்து வரும் வைரம் என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் தகராறு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ரத்தினம், தனது கூட்டாளி மேத்யூஸ் உள்ளிட்டோருடன் சேர்ந்து வைரம் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்.

அப்போது வைரம் ஆதரவாளர்கள் 2 பேரையும் கத்தியால் வெட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக ரத்தினம், மேத்யூஸ் உள்பட இரு தரப்பினரையும் சேர்ந்த சிலரை குன்றத்தூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் இருந்து கடந்த 17-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்த ரத்தினம், “நான் சிறைக்கு செல்ல காரணமாக இருந்தது நீங்கள்தான். உங்களை கொல்லாமல் விடமாட்டேன்” என்று மீண்டும் வைரத்தின் ஆதரவாளர்களை மிரட்டி வந்ததுடன், தனது மோட்டார் சைக்கிளில் கத்தியுடனேயே சுற்றித்திரிந்தார்.

எனவே தங்களை தீர்த்து கட்டுவதற்கு முன்பாக ரத்தினத்தை தீர்த்துக்கட்ட வைரத்தின் ஆதரவாளர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் மாலை எருமையூர் அருகே ரத்தினம் சென்ற மோட்டார் சைக்கிள் மீது காரில் வந்து மோதினர்.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ரத்தினத்தை, காரில் தூக்கி போட்டுக்கொண்டு பழந்தண்டலம் பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, உடலை அங்கேயே போட்டு விட்டு தப்பிச்சென்றது கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான 6 பேரிடம் இருந்தும் கொலை செய்ய பயன்படுத்திய 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்