உள்ளூர் வாகனங்களுக்கான கட்டணம் உயர்வு: சுங்கச்சாவடி அலுவலகத்தை டிரைவர்கள் முற்றுகை

உள்ளூர் வாகனங்களுக்கான கட்டண உயர்வை கண்டித்து கொடைரோட்டில் உள்ள சுங்கச்சாவடி அலுவலகத்தை வாகன டிரைவர்கள் முற்றுகையிட்டனர். அவர்களை உதயகுமார் எம்.பி. சமரசம் செய்தார்.

Update: 2018-02-28 22:00 GMT
கொடைரோடு,

கொடைரோடு, பள்ளபட்டி பகுதியில் மினிவேன், சரக்கு வேன் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்களுக்கு கொடைரோடு சுங்கச்சாவடியில் தனியாக பாஸ் வாங்கி வைத்துள்ளனர். உள்ளூர் வாகனம் என்ற முறையில் இந்த வாகனங்களுக்கு சுங்கசாவடியில் மாதந்தோறும் ரூ.150 கட்டி பாஸ் வாங்கி பயன்படுத்தி வந்தனர். இதற்கிடையே சுங்கவரி வசூல் செய்ய புதிய ஒப்பந்தம் செய்த தனியார் நிறுவனத்தினர் உள்ளூர் வாகனங்களுக்கான கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.

உள்ளூர் வாகனங்களுக்கான கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று மினிவேன் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் நலச்சங்கம் சார்பாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு கோரிக்கை மனு அனுப்பி வைத்தனர். இந்த பிரச்சினை தொடர்பாக அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்திலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த மினிவேன் உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் நல சங்கத்தினர் நேற்று கொடைரோடு சுங்க சாவடி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஓட்டுனர்கள் நல சங்க தலைவர்கள் (சி.ஐ.டி.யூ) ரமேஷ்பாண்டியன், தனபாண்டி ஆகியோர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக உதயகுமார் எம்.பி. காரில் வந்தார். இதையடுத்து அவர் கள், எம்.பி.யிடம் கோரிக்கையை வலியுறுத்தினர்.

இதையடுத்து அவர், சுங்கவரி மைய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கட்டணத்தை உயர்த்துவது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகளிடம் நான் பேசி முடிவு செய்கிறேன். அதுவரை வழக்கமான கட்டணத்தையே வசூல் செய்ய வேண்டும். மேலும் உள்ளூர் மக்கள் பிரச்சினை பற்றி, கட்டணம் வசூல் செய்யும் நிறுவனத்திற்கும் தகவல் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு அதிகாரிகளும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து முற்றுகையை கைவிட்டு ஓட்டுனர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்