காளியம்மன் கோவில் திருவிழா

குமாரபாளையத்தில் காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.

Update: 2018-02-28 22:00 GMT
குமாரபாளையத்தில்

காளியம்மன் கோவில் திருவிழா
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்

குமாரபாளையத்தில் காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி குழந்தையுடன் தீக்குண்டம் இறங்கிய பக்தரை படத்தில் காணலாம்.
குமாரபாளையம்,

குமாரபாளையத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா குண்டம், தேர்த்திருவிழா கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோவில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி, மறு பூச்சாட்டுதல், கொடியேற்று விழா, தேர்கலசம் வைத்தல், சக்தி அழைப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை 6 மணிக்கு மகா குண்டம் தீ மிதித்தல் நிகழ்ச்சி தொடங்கியது. இதற்காக சுமார் 30 அடி நீளமும் 3 அடி அகலத்தில் நெருப்பூட்டப்பட்ட தீக்குண்டம் அமைக்கப்பட்டு செந்தனலாக காட்சி அளித்தது. காலை 6 மணிக்கு தலைமை பூசாரி சித்துராஜ் சக்தி கலசம் சுமந்தபடி குண்டம் இறங்கினார்.

இதைத்தொடர்ந்து மற்ற பூசாரிகள் குண்டம் மிதித்தனர். அதன்பின் இருவாரங்களாக விரதம் இருந்து வந்த ஆண்,பெண் பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். ஓம்சக்தி பராசக்தி என்று முழங்கியபடி ஆண், பெண் பக்தர்கள் சாமியை வணங்கியபடி தீ மிதித்தனர்.

ஆண்கள் மட்டும் குழந்தைகளை தூக்கிச்சென்று தீ மிதிக்க அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து பகல் 11 மணிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தீ மிதி விழாவை வெளிநாட்டு மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் பார்த்தனர். குண்டம் என்னும் குண்டம் பராமரிப்பு குழுவினர் தீமிதித்தலின் போது பக்தர்கள் தீயில் விழாதபடி பக்தர்களை காத்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வேலுத்தேவன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு அம்மன் திருக்கல்யாணமும், பகல் 10 மணிக்கு தேரோட்டமும், இரவு 7 மணிக்கு வண்டி வேடிக்கையும், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தேர் நிலைக்கு வரும் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு வாணவேடிக்கை, இரவு 9 மணிக்கு அம்மன் அலங்கார வீதி உலாவும் நடக்கிறது.

நாளை மறுநாள்(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், 4-ந் தேதி மாலை 6 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் விழாவும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருவிழாக்குழு நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்