விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை மையம்

விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை மையத்தை ராஜேந்திரன் எம்.பி. திறந்து வைத்தார்.

Update: 2018-02-28 22:00 GMT
விழுப்புரம்,

இந்திய வெளியுறவுத்துறையும், தபால் துறையும் இணைந்து மாவட்டங்கள்தோறும் பாஸ்போர்ட் சேவை மையத்தை தொடங்கி வருகிறது. அந்த வகையில் தபால் துறையின் புதுச்சேரி மண்டலத்திற்குட்பட்ட விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது.

விழாவிற்கு சென்னை நகர மண்டலத்தின் இயக்குனர் கோவிந்தராஜன், சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அசோக்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பாஸ்போர்ட் சேவை மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பாஸ்போர்ட் விண்ணப்ப படிவத்தை வழங்கினார். அதன் பின்னர் அவர் பேசியதாவது:-

பாஸ்போர்ட் பெறுவதற்கு சென்னைக்கு சென்று 2, 3 நாட்கள் காத்திருக்க வேண்டும். பல சிரமங்கள் பட வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையை மாற்றி நமது மாவட்டத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பது என்பது பெரிய விஷயம்.

விழுப்புரம் மாவட்டம் தமிழகத்திலேயே மிகப்பெரிய மாவட்டமாகும். இங்கிருந்து ஏராளமானவர்கள் வெளி நாடுகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள். இதை அறிந்து மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் இந்த பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்பட்டிருப்பது ஒரு வரப்பிரசாதமாகும். இதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை பாஸ்போர்ட் பெறுவதற்காக இனி சென்னைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. விழுப்புரம் தபால் நிலையத்திற்கு நேரடியாக வந்து தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கிறவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக படித்த இளைஞர்கள் மற்றும் பெரும்பான்மையான மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று வேலைவாய்ப்பு பெறுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும். அவ்வாறு வருபவர்களுக்கு தபால் நிலைய அதிகாரிகளும் உடனுக்குடன் உதவி செய்து தர வேண்டும்.

தொடர்ந்து சேமிப்பு கணக்கு தொடங்கியவர்களுக்கு அதற்கான புத்தகத்தையும், செல்வ மகள், செல்வ மகன் திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு அதற்கான கணக்கு புத்தகங்களையும் ராஜேந்திரன் எம்.பி. வழங்கினார்.

விழாவில் புதுச்சேரி முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் அகில் ஆர்.நாயர், விழுப்புரம் உதவி கோட்ட கண்காணிப்பாளர் ராஜேந்திரன், புதுச்சேரி உதவி கோட்ட கண்காணிப்பாளர் முருகன், சென்னை மண்டல தபால் துறை உதவி இயக்குனர் துரைராஜ், விழுப்புரம் தபால் அதிகாரி ஏழுமலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்