மாற்று சான்றிதழ் வழங்க மறுத்ததாக வழக்கு: நீதிபதியிடம் மன்னிப்பு கேட்ட தனியார் பள்ளிக்கூட தாளாளர்

மாற்று சான்றிதழ் வழங்க மறுத்ததாக வள்ளியூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

Update: 2018-02-28 20:45 GMT
வள்ளியூர்,

மாற்று சான்றிதழ் வழங்க மறுத்ததாக வள்ளியூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது நீதிபதியிடம் மன்னிப்பு கேட்டதுடன் கோர்ட்டிலேயே மாணவனுக்கு சான்றிதழை பள்ளிக்கூட தாளாளர் வழங்கினார்.

மாற்று சான்றிதழ் வழங்க மறுப்பு


நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளத்தை சேர்ந்தவர் மாயாண்டி. இவருடைய மகன் வேம்பு (வயது 8). இவன் சமூகரெங்கபுரம் அருகே கும்பிகுளத்தில் உள்ள தனது பாட்டி இசக்கியம்மாள் வீட்டில் வளர்ந்து வருகிறான். திசையன்விளையில் உள்ள ஜெயராஜேஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இலவச கல்வி திட்டத்தின் கீழ் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் சிறுவன் வேம்புக்கு கல்வி கட்டணம் செலுத்தும்படி பள்ளி நிர்வாகம், அவனது பாட்டிக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரால் பணம் செலுத்த முடியவில்லை. இதனால் தனது பேரனை அரசு பள்ளியில் சேர்க்கப்போவதாகவும், எனவே மாற்று சான்றிதழை தரும்படி பள்ளி நிர்வாகத்திடம் இசக்கியம்மாள் கேட்டு உள்ளார். ஆனால், கல்வி கட்டணம் செலுத்தினால் தான் மாற்று சான்றிதழை தர முடியும் என்று பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாக தெரிகிறது.

கோர்ட்டில் வழக்கு

இதுதொடர்பாக வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில், இசக்கியம்மாள் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், எனது பேரனை திசையன்விளையில் உள்ள ஜெயராஜேஷ் மெட்ரிக் பள்ளியில் இலவச கல்வி திட்டத்தின் கீழ் சேர்த்தோம். ஆனால் கல்வி கட்டணம் செலுத்தும்படி பள்ளி நிர்வாகத்தினர் கூறினர். இதனால் அரசு பள்ளியில் சேர்க்க எனது பேரனின் மாற்று சான்றிதழை கேட்டபோது, கல்வி கட்டணம் செலுத்தினால் தான் மாற்று சான்றிதழை தருவோம் என்று கூறுகிறார்கள். எனவே மாற்று சான்றிதழ் தர உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த மனு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியதுடன், நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜராகும்படி பள்ளி தாளாளருக்கு உத்தரவிடப்பட்டது. நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பள்ளி தாளாளர் கோர்ட்டில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

மன்னிப்பு

இந்த நிலையில் நேற்று வள்ளியூர் கோர்ட்டில் நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் பள்ளி தாளாளர் ஜெயராஜேஷ் ஆஜரானார். அவர் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டதுடன் சிறுவனின் மாற்று சான்றிதழை கொடுக்கவும் ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து கோர்ட்டில் வைத்தே சிறுவனின் மாற்று சான்றிதழ் அவனது பாட்டியிடம் வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தால் நேற்று அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்