பிச்சைக்காரர்களை பராமரித்து வரும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சிக்கல்

தேனி மாவட்டத்தில் பிச்சைக்காரர்களை மீட்டு பராமரித்து வரும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு விதிமீறல் தொடர்பாக, சமூக நலத்துறை மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

Update: 2018-02-28 21:45 GMT
தேனி,

தேனி மாவட்டத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பிச்சைக்காரர்கள் மீட்பு இயக்கம் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அப்போது மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு, பல்வேறு தன்னார்வல அமைப்புகள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் குழுவாக இணைந்து 200-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டனர். சிலர், அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்க்கப்பட்டனர்.

இந்தநிலையில், பிச்சைக்காரர்களை மீட்டு பராமரித்து வரும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சமூக நலத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. விதிகளை மீறி முதியோர்கள் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களை வெளியேற்றி வேறு இடத்தில் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தேனி மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசு உதவி பெற்று நடத்தப்படும் 7 இல்லங்களில் தான் ஆதரவற்றோர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இந்த இல்லங்கள் முறையாக பதிவு பெற்றது. முறையான பதிவு மற்றும் உரிமம் பெறாமல் செயல்படும் இல்லங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அத்துடன் விதியை மீறி முதியோர்களை தங்க வைத்துள்ள 2 ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

முதியோர் இல்லமாக இருந்தால் குறைந்தது 25 பேரும், அதிக பட்சம் 50 பேரும் இருக்க வேண்டும். அவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். முதியோர் மற்றும் குழந்தைகள் இல்லங்கள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகமாக இருந்தால் 25 குழந்தைகள், 25 முதியவர்கள் வரை வைத்துக் கொள்ளலாம். 3 பேருக்கு ஒரு அறை, அந்த அறையில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். மாதம் ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். சத்தான உணவு வழங்க வேண்டும்.

ஒருங்கிணைந்த வளாகம் இல்லாமல் குழந்தைகள் இல்லங்களில் முதியோர்களை தங்க வைக்கக்கூடாது. அவ்வாறு தங்க வைத்துள்ளவர்கள், உடனே சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களை கண்டறிந்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அல்லது விதிமுறைகளுக்கு உட்பட்டு, வேறு இடத்தில் தங்க வைத்து பராமரிக்க வேண்டும். விதிமீறல் தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட இல்லங்களை மூடவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்