பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்பு படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

நாயை அழைத்து சென்றபோது பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். படுகாயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2018-02-28 22:45 GMT
தஞ்சாவூர்,


தஞ்சை விளார்சாலை டாக்டர் கலைஞர்நகர் 3–ம் தெருவை சேர்ந்தவர் மைக்கேல். இவருடைய மனைவி ரோசாலி(வயது52). இவர் நேற்றுபிற்பகல் தான் வளர்க்கும் நாயுடன் தெருவில் நடந்து சென்றார். நாயின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றை ரோசாலி பிடித்து கொண்டு சென்றார். 4–வது தெருவில் பாழடைந்த நிலையில் 60 அடி ஆழ கிணறு உள்ளது. இந்த கிணற்றில் தண்ணீர் இல்லை. கிணற்றை சுற்றிலும் மண் கொட்டப்பட்டு இருந்தது. மண்ணும், கிணற்றின் தடுப்புசுவரும் சமஅளவில் இருந்தது. அந்த கிணற்றின் வழியாக நாயை அழைத்து கொண்டு ரோசாலி வந்தபோது, நாய் வேகமாக இழுத்து சென்றது.

இதனால் கிணற்றை சுற்றிலும் கொட்டப்பட்டிருந்த மண்ணில் நடந்து சென்ற ரோசாலி தடுமாறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். உள்ளே இருந்து அவர் தொடர்ந்து சத்தம் எழுப்பினார். கிணற்றுக்கு வெளியே நாயும் குரைத்து கொண்டிருந்தது. சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் கிணற்றை வந்து பார்த்தபோது உள்ளே ரோசாலி உயிருக்கு போராடியது தெரியவந்தது. உடனே தஞ்சை தீயணைப்பு நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் குமார் உத்தரவின்பேரில் நிலைய அதிகாரி கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.


பின்னர் கிணற்றுக்குள் வி‌ஷ வாயு பரவியிருக்கிறதா? என்பதற்காக தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். பின்னர் விளக்கை ஏற்றி வாளியின் உதவியுடன் கிணற்றுக்குள் இறக்கி பார்த்தனர். விளக்கு அணையாமல் இருந்ததால் வி‌ஷ வாயு இல்லை என்பதை தீயணைப்பு வீரர்கள் உறுதி படுத்தினர். இதையடுத்து தீயணைப்பு வீரர் பொய்யாமொழி கயிற்றின் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கி உயிருக்கு போராடிய ரோசாலியை மீட்டு மேலே கொண்டு வந்தார். இடுப்பில் பலத்த காயம் அடைந்த அவர், 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடு ஒன்று கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. அதை மீட்ட தீணைப்பு வீரர்கள், பயன்படாத நிலையில் உள்ள கிணற்றை மூடும் படி அப்பகுதி மக்களிடம் வலியுறுத்தினர். ஆனால் கிணற்றை மூடாததால் இன்றைக்கு பெண், தவறி விழுந்துவிட்டார். இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க கிணற்றை மூடும்படி மீண்டும் தீயணைப்பு வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர். கிணற்றை மூட அப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்