சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பா? நடிகை அமலாபால் பதில் அளிக்க மறுப்பு

சொகுசு கார் வாங்கி புதுவையில் பதிவு செய்ததில் வரி ஏய்ப்பு நடந்ததா? என்பது குறித்து நடிகை அமலாபால் பதில் அளிக்க மறுத்தார்.

Update: 2018-02-27 23:45 GMT
புதுச்சேரி,

பிரபல நடிகை அமலாபால் வெளிநாட்டு கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்ததாக கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வாங்கிய கார் புதுவை முகவரியில் பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக புதுவை வந்தும் கேரள போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதேபோல் மேலும் சில பிரபலங்கள் புதுவையில் வரி ஏய்ப்பு செய்து இருப்பதாக கவர்னர் கிரண்பெடியும் குற்றஞ்சாட்டினார். ஆனால் நடிகை அமலாபால் கார் வாங்கிய விவகாரத்தில் வரி ஏய்ப்பு ஏதும் நடக்கவில்லை என்று புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சரான ஷாஜகான் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் புதுவையில் நடந்த தனியார் விழாவில் கலந்துகொள்வதற்காக நடிகை அமலாபால் நேற்று வந்து இருந்தார். சர்ச்சைக்குரிய காரிலேயே அவர் புதுவைக்கு வந்திருந்தார்.

இந்த காரை பதிவு செய்த விவகாரம் தொடர்பாக நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினார்கள். ஆனால், இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் விசாரணையில் இருந்து வருகிறது. எனவே அதுகுறித்து பதில் தெரிவிப்பது சட்ட விரோதம் என்று தெரிவித்து பதில் அளிக்க நடிகை அமலாபால் மறுத்தார். 

மேலும் செய்திகள்