வகுப்புகளை புறக்கணித்து மாணவ- மாணவிகள் போராட்டம்

கெங்கவல்லி அருகே பள்ளி நிலத்தை மீட்கக்கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-02-27 22:30 GMT
கெங்கவல்லி,

கெங்கவல்லி பேரூராட்சியில் உள்ள 10-வது வார்டு கணேசபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 68 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி 45 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. நடுநிலைப்பள்ளியாக 5 ஆண்டுகளுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்டது. 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு இடம் வேண்டி அந்த பகுதியில் வசிக்கும் 5 பேர் சேர்ந்து 3 ஏக்கர் 10 சென்டு நிலத்தை 40 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்துள்ளனர். அந்த நிலத்தை கடந்த 1991-ம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு வருவாய்த்துறை மூலம் 37 சென்ட் நிலத்துக்கு பட்டா கொடுக்கப்பட்டது. இந்த இடம் பள்ளிக்கு சொந்தமான இடம் என்று பலமுறை அந்த பகுதி மக்கள் கெங்கவல்லி தாசில்தாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலெக்டர் ரோகிணியிடம் புகார் கொடுத்தனர்.

இந்தநிலையில் நேற்று அந்த பகுதி மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தினார்கள். மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் பள்ளி முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட தொட்டக்கக்கல்வி அலுவலர் அசோக்குமார், வருவாய் ஆய்வாளர் பரசுராமன், கெங்கவல்லி சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி, தொடக்க கல்வி அலுவலர் வாசுகி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். இந்த இடத்தை மீட்டு கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

ஆனால் பொதுமக்கள் உடனடியாக மீட்கக் வேண்டும் என்றனர். இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கெங்கவல்லி பேரூராட்சிக்கு அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வருவாய் துறையினர் பள்ளிக்கு சொந்தமான 3 ஏக்கர் 10 சென்டு இடத்தை மீட்டு தரவில்லை என்றால் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்கள். அவர்களை வருவாய்த்துறையினரும், போலீசாரும் சமரசம் செய்த பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்