ரவுடி கழுத்தை அறுத்துக்கொலை தலைமறைவான நண்பருக்கு போலீசார் வலைவீச்சு

சித்தலவாய் அருகே ரவுடி கழுத்தை அறுத்து, கொலை செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள அவரது நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-02-27 23:15 GMT
கிருஷ்ணராயபுரம்,

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த கோவக்குளத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் அமுல்ராஜ் (வயது 40). ரவுடியான இவர் மீது கரூர், திருச்சி மாவட்டங்களில் 2 கொலை வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் தனது மனைவி ஈஸ்வரியிடம்(32) வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்ற அமுல்ராஜ் அதன்பிறகு மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.

இந்தநிலையில் நேற்று சித்தலவாய் ஊராட்சி முனையனூரை அடுத்த பூஞ்சோலைபுதூரில் உள்ள காட்டுப்பகுதியில் அமுல்ராஜ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருடைய உடல் அருகே அவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த பகுதியில் ஆடு, மாடுகள் மேய்த்தவர்கள் இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து மாயனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், மாயனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜ்மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு கரூரில் இருந்து மோப்பநாய் ‘ஸ்டெபி‘ வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை குறித்து போலீசார் கூறுகையில், “கொலை செய்யப்பட்டு கிடந்தவர் மீது 2 கொலை வழக்குகள் உள்ளன. கடந்த 4 நாட்களாக தனது நண்பர் ஒருவருடன் அமுல்ராஜ் சுற்றி வந்துள்ளார். நேற்றும் (நேற்று முன்தினம்) அவருடன் தான் சென்றுள்ளார். இரவு 7 மணி அளவில் கொலை நடந்த இடத்தில் 2 பேரும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அதன்பிறகு அவரது நண்பர் தலைமறைவாகி விட்டார். இதனால் நண்பரே அமுல்ராஜை கொலை செய்து இருக்கலாம். அவரை பிடித்தால் தான் மற்ற விவரங்கள் தெரியவரும். கொலை நடந்த இடத்தில் கிடைத்த அனைத்து தடயங்களும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அமுல்ராஜின் செல்போனை காணவில்லை. கொலையாளியை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கொலையாளியை பிடித்துவிடுவோம்” என்றனர்.

இந்த கொலை குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அமுல்ராஜின் நண்பரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்