நெல்லை அறிவியல் மைய ஆண்டு விழா: அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு மாணவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு மாணவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மத்திய சுங்கத்துறை இணை கமி‌ஷனர் நரேஷ் கூறினார்.

Update: 2018-02-27 20:45 GMT
நெல்லை,

அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு மாணவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மத்திய சுங்கத்துறை இணை கமி‌ஷனர் நரேஷ் கூறினார்.

அறிவியல் மைய ஆண்டு விழா

நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தின் 31–வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. கிருஷ்ணாபுரம் இந்திய பூமத்திய ரேகை ஆராய்ச்சி மைய பேராசிரியர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். அறிவியல் மைய அலுவலர் நவராம்குமார் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக மத்திய சுங்கத்துறை இணை கமி‌ஷனர் நரேஷ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ஒரு நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் கையில்தான் உள்ளது. எனவே மாணவர்கள் நல்லமுறையில் படிக்க வேண்டும். எதிர்காலத்தில் அதிக வேலை வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் 25 அறிவியல் மையங்கள்தான் உள்ளது. அதில் தென்மாவட்டத்தில் நெல்லையில் அறிவியல் மையம் அமைந்திருப்பது மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு ஆகும்.

பிற நாடுகள் போல் இந்தியாவில் தொழில் புரட்சி ஏற்படவில்லை. இன்னும் வளர வேண்டி உள்ளது. அதற்கு புதிய தொழில் நுட்பங்கள் தேவை. எனவே மாணவர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அந்த வகையில் தங்களது கல்வியை அமைத்துக் கொள்ள வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

உணவு பாதுகாப்பு கண்காட்சி

முன்னதாக அறிவியல் மைய வளாகத்தில் உணவு பாதுகாப்பு கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதில் உணவு பாதுகாப்பு ஆய்வாளர் சங்கரலிங்கம் தலைமையில் அலுவலர்கள் உணவு பொருட்களின் தரம் குறித்தும், தரமற்ற உணவு பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மாணவ–மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சிகளில் கல்வி உதவியாளர்கள் மாரி லெனின், பொன்னரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்