குலசேகரம் பகுதியில் சாலைகளை சீரமைக்க கோரி வியாபாரிகள் கடையடைப்பு

குலசேகரம் பகுதியில் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க கோரி வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-02-27 23:00 GMT
குலசேகரம்,

ஆரல்வாய்மொழியில் இருந்து குலசேகரம் வழியாக கேரள மாநிலம் நெடுமாங்காட்டுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஏராளமான லாரிகள், பஸ்கள், கார்கள் செல்கின்றன.

இந்த சாலை வழியாக திற்பரப்பு அருவி, சிற்றார் அணைக்கட்டுகள், கோதையாறு, பேச்சிப்பாறை அணை, பெருஞ்சாணி அணை, மாத்தூர் தொட்டிப்பாலம் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வாகனங்களில் வருகிறார்கள்.

இந்த சாலையில் உண்ணியூர்கோணத்தில் இருந்து குலசேகரம், மங்கலம், பொன்மனை வரை கடந்த 4 ஆண்டுகளாக சரியான பராமரிப்பு இல்லாததால் சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லும் போது சாலை முழுவதும் புழுதிக்காடாகி விடுகிறது.

இதனால் சாலையோரம் கடைகள் நடத்தும் வியாபாரிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த சாலையை சீரமைக்க கோரி நீண்ட நாட்களாக வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் சேதம் அடைந்த சாலையை சீரமைக்க கோரி குலசேகரம் பகுதி வியாபாரிகள் சங்கம் சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி குலசேகரம் பகுதியில் உள்ள டீக்கடைகள், ஓட்டல்கள், ஜவுளி கடை, பேக்கரிகள் உள்ளிட்டவை நேற்று அடைக்கப்பட்டன.

கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்ற வியாபாரிகள், குலசேகரம் அரசமூடு சந்திப்பில் முகத்தை துணியால் மூடியபடி (மாஸ்க் அணிந்து) சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாபாரிகள் சங்க தலைவர் சதாசிவன் தம்பி தலைமை தாங்கினார். மனோதங்கராஜ் எம்.எல்.ஏ., சங்க நிர்வாகிகள் முருகபிரசாத், விஜயன், ராஜ்மோகன், ரவி, கோபாலகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன் உள்பட வியாபாரிகள் பலரும், பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்