கிருஷ்ணகிரி புதூர் ஏரியில் 4 மின்கம்பங்கள் சாய்ந்தன உடனடியாக மாற்று இடத்தில் அமைத்தனர்

கிருஷ்ணகிரி புதூர் ஏரியில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பங்கள் நேற்று அதிகாலை சாய்ந்தன. 50-க்கும் மேற்பட்ட மின்ஊழியர்கள், தண்ணீரில் இருந்த மின்கம்பத்தை அகற்றி, மாற்று இடத்தில் அமைத்தனர்.

Update: 2018-02-26 22:45 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டிகானப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதூர் ஏரி அமைந்துள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரி முழுவதும் தற்போது, ஆகாயதாமரைகள் படர்ந்துள்ளன. ஏரியின் உள்ளே மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நேற்று அதிகாலை 3.20 மணியளவில் மின்கம்பத்தை தாங்கி பிடிக்கும் இழுவை கம்பி திடீரென அறுந்ததால், அடுத்தடுத்து 4 மின்கம்பங்கள் நீரிலும், ஏரியின் மேல் பகுதியிலும் சரிந்தன. தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தினார்கள். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அதிகாலை 3.30 மணி முதல் காலை 7 மணி வரை, சென்னை சாலை, பழையபேட்டை, ஜக்கப்பன்நகர், காந்திநகர், பெரியார்நகர், கிட்டம்பட்டி உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது.

ஏரியில் விழுந்த மின்கம்பங்களை அகற்றும் பணியில் மேற்பார்வை பொறியாளர் நந்தகோபால், செயற்பொறியாளர் கோவிந்தராஜூ, உதவி செயற்பொறியாளர் முத்துசாமி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் ஈடுபட்டனர். நீரில் இருந்து மின்கம்பங்கள் அகற்றப்பட்டு, ஏரி கரை ஒரம் தரைப்பகுதியில் மாற்றி அமைக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்