கூடுதலாக ரூ.21 கோடி பயிர் காப்பீடு தொகை ஒதுக்கீடு

தூத்துக்குடி மாவட்டத்தில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்காக கூடுதலாக ரூ.21 கோடியே 20 லட்சம் பயிர் காப்பீடு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2018-02-26 22:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் 2016-17-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை ரூ.59 கோடியே 79 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதில் மக்காச்சோளத்துக்கு ரூ.38 கோடியே 31 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த நிலையில் மக்காச்சோளத்துக்கு கூடுதலாக 7 ஆயிரத்து 289 விவசாயிகளுக்கு ரூ.21 கோடியே 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதே போன்று உளுந்து, கம்பு, சோளம் பயிர்களுக்கும் காப்பீட்டு தொகை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்துக்கு தேவையான தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. ஏற்கனவே 1,404 கன அடி திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் படிப்படியாக 700 கன அடி வரை குறைக்கப்பட்டது.

மேலும் பயிர் சாகுபடிக்கு தேவை இருப்பதால் கூடுதல் தண்ணீர் திறக்க நெல்லை மாவட்ட கலெக்டரிடம் பேசினோம். அதன்பேரில் தற்போது கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

மருதூர் மேலக்காலில் 300 கனஅடியும், கீழக்காலில் 210 கனஅடியும், ஸ்ரீவைகுண்டம் வடகாலில் 195 கனஅடியும், தென்காலில் 199 கனஅடியும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் குடிநீர் தேவைக்காக மணிமுத்தாறு அணையில் நீர் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பணியின் போது இறந்த கிராம உதவியாளர் கோபால்சாமி என்பவரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தியாகராஜன், சிரஸ்தார் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்