சுவர்ண லட்சுமி சிலை பிரதிஷ்டை

ஸ்ரீபுரம் தங்க கோவிலில் சுவர்ண லட்சுமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சக்தி அம்மா தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2018-02-26 21:30 GMT
வேலூர்,

வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் தங்க கோவிலில் 70 கிலோ தங்கத்தில் சுவர்ண லட்சுமிக்கு கடந்த 2013-ம் ஆண்டு சிலை அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து செய்யப்பட்ட பல்வேறு பூஜை, அபிஷேகம் மூலம் சிலை முழுசக்தியை அடைந்தது. எனவே, சுவர்ண லட்சுமி சிலை புதிதாக கட்டப்பட்ட சன்னதியில் கும்பாபிஷேகம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

இதையொட்டி சிலை கடந்த ஒரு மாதமாக வேலூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு கரிக்கோல ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

கும்பாபிஷேகத்தையொட்டி சன்னதியின் அருகே யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 6 கால பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை சுவர்ண லட்சுமி சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் 10-30 மணியளவில் சக்தி அம்மா தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. சக்தி அம்மா சன்னதி கோபுர கலசத்தின் மீது புனிதநீரை ஊற்றினார். அப்போது மேளதாளங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு புனிதநீரை வழங்கி சக்தி அம்மா அருளாசி வழங்கினார்.

இதில், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், வாலாஜா தன்வந்திரிபீட முரளிதர சுவாமிகள், நந்தகுமார் எம்.எல்.ஏ., நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி, ஸ்ரீபுரம் கோவில் இயக்குனர் சுரேஷ்பாபு, அறங்காவலர் சவுந்தரராஜன், நாராயணி பீட மேலாளர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்