காங்கேயம் அருகே கோர விபத்து: மரத்தில் கார் மோதி சிறுமி உள்பட 4 பேர் பலி

காங்கேயம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் சிறுமி உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது இந்த கோர விபத்து நடந்தது.

Update: 2018-02-26 22:00 GMT
காங்கேயம்,

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பெரியசோரகை கஸ்பாகாட்டுவளசு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 30), விவசாயி. இவருடைய மனைவி கோகுலப்பிரியா (29). இவர்களுக்கு பரிவிதா என்ற 9 மாத கைக்குழந்தை உள்ளது. வெங்கடேஷ் தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் பழனி முருகன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.

இதற்காக வெங்கடேஷ், அவருடைய மனைவி கோகுலப்பிரியா, மகள் பரிவிதா ஆகியோருடன் ஒரு காரில் பழனி முருகன் கோவிலுக்கு சென்றனர். இந்த காரில் தனது மாமனார் ரங்கநாதன் (54), மாமியார் ஜோதி (50), இவர்களுடைய மகள் சங்கீதா, சங்கீதாவின் மகள் ஜெனிதா (4) மற்றும் வெங்கடேஷின் தாயார் லட்சுமி ஆகியோரையும் அழைத்து சென்றனர். இவர்கள் அனைவரும் பழனி முருகன் கோவிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அதே காரில் அனைவரும் சேலம் திரும்பிக்கொண்டிருந்தார்கள். காரை வெங்கடேஷ் ஓட்டிச்சென்றார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை கடந்து காங்கேயம்- சென்னிமலை நான்குவழி தேசிய நெடுஞ்சாலையில் சாவடி அருகே நேற்று காலை 10.30 மணிக்கு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று வெங்கடேஷின் கட்டுப்பாட்டை இழந்த கார், வலது புறம் திரும்பி, ரோட்டின் நடுவில் உள்ள தடுப்பை கடந்து அடுத்த ரோட்டின் ஓரத்தில் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதி, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கி சின்னாபின்னமானது. காருக்குள் இருந்தவர்கள் காரின் இடிபாடுகளில் சிக்கி “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று அபயக்குரல் எழுப்பினார்கள். உடனே அந்த வழியாக சென்றவர்களும், காங்கேயம் போலீசாரும் விரைந்து சென்று காருக்குள் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டனர்.

அப்போது காருக்குள் ரங்கநாதன் மனைவி ஜோதி, வெங்கடேஷின் தாயார் லட்சுமி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் கிடந்தனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வெங்கடேஷ், கோகுலப்பிரியா, பரிவிதா, ரங்கநாதன், சங்கீதா, ஜெனிதா ஆகியோரை மீட்டு ஒரு ஆம்புலன்சில் காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி ஜெனிதா இறந்தாள். இதையடுத்து மற்றவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போகும் வழியிலேயே ரங்கநாதன் இறந்தார். இதையடுத்து வெங்கடேஷ், கோகுலப்பிரியா, பரிவிதா, சங்கீதா ஆகிய 4 பேருக்கும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் ஜோதி, லட்சுமி ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இவர்களின் உடல்களுடன் சிறுமி ஜெனிதா உடலும் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ரங்கநாதன் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு ஊருக்கு திரும்பியபோது, கார் மரத்தில் மோதி 4 பேர் பலியான சம்பவம் குடும்பத்தினர், உறவினர்கள் மத்தியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்