குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர் வீட்டில் 50 பவுன் நகைகள் கொள்ளை

மீஞ்சூர் அருகே, குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் 50 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

Update: 2018-02-25 21:45 GMT
செங்குன்றம்,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள கடமஞ்சேரி கிராமத்தில் வசிப்பவர் தயானந்த்(வயது 56). ஒப்பந்ததாரரான இவர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை எடுத்து தொழில் செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் தயானந்த், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஆந்திர மாநிலம் சித்தூரில் நடைபெற்ற தனது உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்துகொள்ள சென்று விட்டார்.

இந்த நிலையில் நள்ளிரவில் மர்மநபர்கள், தயானந்த் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த வைர மோதிரம், கம்மல் உள்பட 50 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் தயானந்த், ஆந்திராவில் இருந்து உடனடியாக வீட்டுக்கு திரும்பி வந்தார். பின்னர் இதுபற்றி காட்டூர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரஞ்சித்குமார், பழனி, ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்