உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்கிய கலெக்டர்

திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள உழவர் சந்தையில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி காய்கறிகளை வாங்கினார்.

Update: 2018-02-25 21:30 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் பின்புறம் உழவர் சந்தை உள்ளது. இந்த நிலையில் உழவர்சந்தைக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று சாதாரண உடையில் வந்து பொதுமக்களுடன் சேர்ந்து தனது வீட்டுக்கு தேவையான காய்கறிகள் வாங்கினார்.

பின்னர் அவர் உழவர்சந்தையில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் சந்தையில் குறைகள் ஏதேனும் உள்ளதா என்று கேட்டறிந்தார்.

திருவண்ணாமலை உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்கு வதற்காகவும், ஆய்வு மேற்கொள்வதற்காகவும் வந்துள்ளேன். இந்த உழவர்சந்தையில் 107 கடைகள் உள்ளன. இதன் மூலம் 125 விவசாயிகள் காய்கறிகள் மற்றும் பழங்கள் வியாபாரம் செய்கிறார்கள்.

இங்கு தினமும் 3 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 500 வாடிக்கையாளர்கள் காய்கறிகள் வாங்குவதற்காக வருகிறார்கள்.

இதன் மூலம் உழவர்சந்தையில் தினமும் ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வியாபாரம் நடைபெறுகிறது. இங்குள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். வியாபாரிகள் தங்களுக்கு ஒரு டீக்கடை, உணவகம், கூடுதல் கடைகள் கட்டித்தரவும் கோரிக்கை விடுத்தனர். மகளிர் சுய உதவிக்குழு மூலம் உணவகமும், ஆவின் பாலகமும் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் அரசு பஸ்களில் வரும்போது சில பஸ்களில் தாங்கள் கொண்டு வரும் காய்கறிகளை எடுத்துச் செல்ல அனுமதி வழங்குவதில்லை என கூறினர். இதுகுறித்து நான் போக்குவரத்து கழகத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளேன்.

பொதுமக்களின் சார்பாக கூடுதல் கழிவறைகள், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தம் ஆகிய கோரிக்கைகள் வைத்தனர். இங்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும்.

இந்த உழவர் சந்தையில் நமது மாவட்டத்தில் விளையும் காய்கறிகள், பழங்கள் தவிர, வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப மற்ற காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இங்கு விற்பனை செய்யப்படும் அனைத்து காய்கறிகளுக்கு ஒருங்கிணைப்பு குழு மூலம் தினமும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்