உஷாரய்யா உஷாரு..

வாகன விபத்துகள் அதிகரித்துக்கொண்டிருக்கும் காலம் இது. அதிகாலையில் நடந்த அந்த பஸ் விபத்தில் நான்கு பேர் இறந்து போனார்கள்.

Update: 2018-02-25 06:09 GMT
வாகன விபத்துகள் அதிகரித்துக்கொண்டிருக்கும் காலம் இது. அதிகாலையில் நடந்த அந்த பஸ் விபத்தில் நான்கு பேர் இறந்து போனார்கள். 24 வயதான ஒரு பெண் படுகாயத்தோடு உயிர்பிழைத்தாள். அவளது முதுகுத் தண்டில் ஏற்பட்ட காயத்தால் உடலின் ஒருபுறம் செயலிழந்துபோனது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவள், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகியும் அவளை பார்க்க எந்த உறவினர்களும் வரவில்லை. அரசு மருத்துவமனையினர் வேண்டுகோளுக் கிணங்க, தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், படுக்கையிலே வைத்து அவளை பராமரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

உற்றார் உறவினர்கள் அனைவரும் புறக்கணிக்கும் அளவுக்கு அவள் வாழ்க்கையில் நடந்தது என்ன?


“என்னோடு பிறந்தவர்கள் மூன்று பெண்கள். நான்தான் மூத்தவள். நான் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு அதற்கு மேல் படிக்க வாய்ப்பில்லாமல் ஜெராக்ஸ் கடை ஒன்றில் வேலைபார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது வெளிநாட்டில் வேலைபார்த்துக்கொண்டிருக்கும் ஒருவருக்கு என்னை பெண் கேட்டு வந்தார்கள். அவரை போட்டோவில் மட்டுமே பார்த்தேன். நேரடியாக அவர் பெண் பார்க்க வரவில்லை. ஆனால் அவர் என் போட்டோவை பார்த்து, என்னை பிடித்திருப்பதாகக்கூற என் பெற்றோரும் ‘எப்படியாவது திருமணம் நடந்தால் போதும்’ என்று கருதி திருமணத்திற்கு சம்மதித்துவிட்டார்கள்.

திருமணத்திற்கு நாலைந்து நாட்களுக்கு முன்பு தான் அவர் சொந்த ஊர் வந்தார். அவரை திரு மணத்திற்கு முந்தைய நாள் பார்த்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் பெண்தன்மை கொண்டவராக காட்சியளித்தார். ஆனாலும் திருமணம் நடந்துவிட்டது.

திருமணம் முடிந்து, பத்து நாட்களாக அவர் திட்டமிட்டு முதலிரவை தள்ளிப்போட்டார். அதனால் ‘நீங்கள் பெண்தன்மையுடன் இருப்பதுதானே அதற்கான காரணம்..’ என்று நான், அவரிடம் கேட்டேன். உடனே அவருக்கு கோபமும், ஆத்திரமும் வந்தது. என்னை கண்டபடி திட்டினார்.

அதை காரணங்காட்டி என்னிடம் இடை வெளியை உருவாக்கினார். திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகியும் அவர் முதலிரவு நடத்தாமலே, லீவு முடிந்ததையும் என்னிடம் சொல்லிக்கொள்ளாமலே, வெளிநாட்டிற்கு கிளம்பிப் போய்விட்டார்.

அது எனக்கு அவமானத்தை உருவாக்கிவிட்டது. அந்த கோபத்தில் அவரது பெண்தன்மையை சுட்டிக்காட்டி, ‘அவரோடு வாழப் பிடிக்கவில்லை’ என்று கடிதம் எழுதி அனுப்பிவிட்டு, அவரது வீட்டில் இருந்த என் பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு, என் தாய் வீட்டிற்கு சென்றேன்.

நான் கணவருடனான உறவை முறித்துக்கொண்டது என் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. ‘உன் இஷ்டத்துக்கெல்லாம் வாழ அனுமதிக்க முடியாது. நீ கணவர் வீட்டில் போய் வாழும் வழியை பார். அங்கு வாழ விரும்பாவிட்டால் வேறு எங்கேயாவது செல்’ என்று துரத்திவிட்டார்கள்.

பின்பு நான் நகரப் பகுதிக்கு தனியாக வந்தேன். அங்கு ஒரு விடுதியில் தங்கி, துணிக் கடை ஒன்றில் வேலைபார்த்தேன். அங்கு என்னோடு, அருகில் உள்ள மாநிலத்தை சேர்ந்த ஒருவர் வேலைபார்த்தார். எனது வாழ்க்கையில் நடந்ததெல்லாம் அவருக்கு தெரியும். அதனால் அவர் என்னோடு அன்பாக பழகினார். தனக்கு திருமணமாகவில்லை என்றும், என்னை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் சொன்னார். நாங்கள் இருவருமே குடும்பத்தை பிரிந்து வெவ்வேறு விடுதிகளில் தங்கியிருந்ததால் அன்புக்கு ஏங்கினோம். எந்த கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாக சுற்றினோம். உடல்ரீதியாகவும் இணைந்துவிட்டோம்.

காலப்போக்கில் அவரது செயல்பாடுகளில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம், ‘உங்கள் ஊருக்கு சென்று நமது காதல் பற்றி உங்கள் பெற்றோரிடம் தெரிவியுங்கள். நாம் ஏற்கனவே பேசிக்கொண்டபடி, உங்கள் பெற்றோர் அனுமதியோடு திருமணம் செய்துகொள்ளலாம்’ என்று கூறி, அவரது ஊருக்கு அனுப்பிவைத்தேன்.

அவர் திரும்பி வரவேயில்லை. செல்போனில் தொடர்புகொண்டபோது, அவர் பேசுவதை தவிர்த்தார். ஏமாந்துவிட்டோமோ என்ற எண்ணத்தோடு அவர் வசிக்கும் பக்கத்து மாநிலத்திற்கு சென்றேன். அங்கு எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருப்பது தெரிந்தது.

எங்கள் காதலை அவரது மனைவியிடம் சொன்னதும், ஒட்டுமொத்தமாக அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து என்னை விலைமாது என்று திட்டி, அடித்து துரத்திவிட்டார்கள். அந்த அவமானத்தோடு நான் பஸ் ஏறி வந்துகொண்டிருந்த போதுதான் இந்த விபத்தில் சிக்கிவிட்டேன். எனது தாய் தந்தையோ, மாமனார் வீட்டில் இருந்தோ யாரும் வந்து என்னை பார்க்கவில்லை. காதலனுக்கு விபத்து நடந்த விவரத்தை தெரிவித்தும், அவனும் வரவில்லை. நான் நடைபிணமாகிவிட்டேன். இனி என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று கண்ணீர் விடுகிறாள்.

பெண்கள் எப்போதும் நிதானத்தை கடைப் பிடித்து, கவனமாக செயல்பட வேண்டியதிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டத்தான் இந்த சம்பவத்தை சொல்கிறோம்!

- உஷாரு வரும்.

மேலும் செய்திகள்