கருப்புக்கொடியுடன் ஊர்வலமாக வந்த 28 பேர் கைது

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி யுடன் ஊர்வலமாக சென்ற 28 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-02-24 22:46 GMT
புதுச்சேரி,

பிரதமர் நரேந்திரமோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதுவை வருகிறார். அவர் அரவிந்தர் ஆசிரமத்திற்கு செல்கிறார். இந்த நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெரியார் திராவிடர் விடுதலை கழகம், அலைகள் இயக்கம், தமிழ் தமிழர் இயக்கம் சார்பில் அரவிந்தர் ஆசிரமம் முன்பு கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இதற்காக அவர்கள் செட்டி வீதி-காந்திவீதி அருகில் ஒன்று கூடினர். அங்கிருந்து அரவிந்தர் ஆசிரமம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

ஊர்வலத்திற்கு பெரியார் திராவிடர் விடுதலை கழக ஒருங்கிணைப்பாளர் கோகுல்காந்திநாத் தலைமை தாங்கினார். ஊர்வலம் செஞ்சி சாலை அருகே வந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெரியகடை போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் போலீசாரின் தடுப்பை மீறி செல்ல முயற்சி செய்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை போலீசார் கைது செய்தனர். போராட்டம் குறித்து கோகுல்காந்திநாத் கூறியதாவது:-

அரவிந்தர் மனைவி மீராவால் உருவாக்கப்பட்ட ஆரோவில் வெளிநாட்டவர் ஆதிக்க பகுதியாக மாறி வருகிறது. இங்கு தமிழர் கலாசாரத்திற்கும், ஒழுக்கத்திற்கும் எதிரான செயல்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே பிரதமர் மோடியின் பா.ஜ.க. ஆட்சியில் நாட்டில் சிறுபான்மை தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

தமிழக விவசாயத்தை அழிக்கும் வகையில் மீத்தேன் எரிவாயு திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், காவிரி நீர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினை ஆகியவற்றில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமூக நீதியை ஒழிக்கும் வகையில் நீட் தேர்வை கொண்டு வந்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் வாழ்வை அழித்துள்ளார். இதுபோன்ற காரணங்களுக்காக கருப்பு கொடி போராட்டத்தினை நடத்தினோம் இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்