டெல்டா பகுதியை பாதுகாக்க பா.ம.க. எந்த தியாகத்தையும் செய்ய தயார் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச்சு

டெல்டா பகுதியை பாதுகாக்க பா.ம.க. எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளது என்று தஞ்சையில் நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.

Update: 2018-02-24 22:45 GMT
தஞ்சாவூர்,

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தஞ்சை கீழவாசல் கொண்டிராஜபாளையத்தில் காவிரி பாசன விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள் சுப்பிரமணி, அய்யாசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் குஞ்சிதபாதம், உழவர் பேரியக்க தலைவர் ஆலயமணி, துணை செயலாளர் ஜோதிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது:–


சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி அடுத்த மாதம் (மார்ச்) 29–ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியமும், காவரி கண்காணிப்பு குழுவும் அமைக்கப்படாவிட்டால், அடுத்த நாள் அதாவது மார்ச் 30–ந் தேதி சென்னையில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும். இதில் அனைத்து விவசாயிகளும் கலந்துகொள்வார்கள்.

தஞ்சையில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெற்றது. தற்போது தாளடி கிடையாது. கடந்த 6 ஆண்டு காலத்தில் ஒரு முறை கூட குறுவை பயிரிடப்படவில்லை. ஏனென்றால் தண்ணீர் இல்லை. சம்பா 6 ஆண்டுகளில் 3 முறைதான் பயிரிடப்பட்டுள்ளது.

தற்போது தண்ணீர் இல்லாமல் சம்பா பயிர்கள் கருகிவிட்டன. கர்நாடகத்தில் தண்ணீர் இருந்தும் கொடுக்க மறுக்கின்றனர். இதற்கு இந்த ஆட்சி தான் காரணம்.

ஓட்டுக்கு பணம் வாங்குவதை மக்கள் நிறுத்தவேண்டும். தற்போது உள்ள ஆட்சியாளர்கள் மத்திய அரசின் அடிமைகளாக இருக்கிறார்கள். அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழ்நாட்டை இந்த ஆட்சியாளர்களிடம் இருந்து காப்பாற்ற ஒரு மருத்துவரால் (ராமதாஸ்) மட்டுமே முடியுமே தவிர நடிகர்களால் முடியாது.


50 ஆண்டுகள் திராவிட கட்சிகளிடம் ஏமாந்தது போதும் இனியும் மக்கள் ஏமாறவேண்டாம். டெல்டா பகுதியை பாதுகாக்க பா.ம.க எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறது. காவிரி பிரச்சினை தொடர்பாக இந்த அரசிடம் சரியான திட்டம் கிடையாது.

 பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் இலவச கிரைண்டர், மிக்சி, டி.வி. வழங்கப்பட மாட்டாது. அதற்கு பதிலாக மாணவ–மாணவிகளுக்கு தரமான இலவச கல்வி வழங்கப்படும். விவசாயிகள், பெண்கள் வாழ்வில் முன்னேற்றம், தமிழகத்தில் மாற்றத்தையும் ஏற்படுத்த பா.ம.க.வால் மட்டுமே முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாநில துணைச்செயலாளர்கள் பழனிசாமி, பாலு, மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், தியாகராஜன், மாவட்ட தலைவர் திருஞானம்பிள்ளை மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக மாநகர் மத்திய மாவட்ட செயலாளர் கோபி சந்தர் வரவேற்றார். நிறைவாக மாவட்ட அமைப்பாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்