பணியாளர் நிர்வாக சீரமைப்பு குழுவை திரும்ப பெறாவிட்டால் போராட்டம்

பணியாளர் நிர்வாக சீரமைப்பு குழுவை திரும்ப பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அரசு அலுவலர் ஒன்றிய அமைப்பின் மாநில தலைவர் சண்முகராஜன் தெரிவித்தார்.

Update: 2018-02-24 22:45 GMT
கரூர்,

தமிழக அரசு துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றக் கூடிய துறையில் போதுமான ஊழியர்கள் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் பணியாளர் நிர்வாக சீரமைப்பு குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதில் காலிப்பணியிடங்களை தனியார் அல்லது ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கலாமா? என்பதை ஆய்வு செய்ய அரசு தெரிவித்துள்ளது.

அரசு பணியை தனியார் துறை ஊழியர்களிடம் ஒப்படைத்தால் சரியான முறையில் ஒத்துழைப்பு இருக்காது. தமிழகம் இருண்ட பாலைவனமாகி விடும். எனவே இந்த குழுவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும். அரசின் ஆணையை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் ‘ஜாக்டோ- ஜியோ கிராப்புடன்’ இணைந்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய அமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப் படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தமிழ்நாடு நில அளவை கணிக வரைவாளர் ஒன்றிப்பின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் அரசு அலுவலர் ஒன்றிய அமைப்பின் மாநில தலைவர் சண்முகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்திற்கு மாநில தலைவர் மணிமாறன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நில ஆவண வரைவாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நில ஆவண வரைவாளர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கும், பதவி உயர்வுகளை எதிர்நோக்கி உள்ளவர்களுக்கும் அமைச்சுப்பணி மற்றும் நிர்வாக பணிகள் குறித்த பயிற்சிகள் வழங்குவதற்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். சென்னை மத்திய நில அளவை அலுவலகத்திலும், சில மாவட்டங்களிலும் முதுநிலை வரைவாளர் பணியிடம் காலியாக இருக்கும் நிலையில் தேர்வு பட்டியல் வெளியிடாததன் காரணமாக பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. தற்போதுள்ள பணி நிலைமைகளை கருத்தில் கொண்டு தேர்வுப்பட்டியல் வெளியிட்டு பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பாக தற்காலிக பதவி உயர்வு வழங்கும் வகையில் உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில பொது செயலாளர் கணேசன், துணை தலைவர் முத்துராஜா, அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் பாரதிதாசன் மற்றும் நில அளவை துறை சங்கத்தை சேர்ந்த கணிக வரைவாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்