தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 12 பேர் கைது

திருப்பூர் டவுன்ஹால் அருகே கேரளாவை தலைமையிடமாக கொண்ட நகைக்கடை செயல்பட்டு வருகிறது.

Update: 2018-02-24 21:45 GMT

திருப்பூர்,

திருப்பூர் குமரன் ரோடு டவுன்ஹால் அருகே கேரளாவை தலைமையிடமாக கொண்ட நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடை நேற்று வழக்கம்போல செயல்பட்டு கொண்டிருந்தது. இந்த நிலையில் மதியம் திடீரென அங்கு கொடிகளுடன் வந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் திருப்பூர் மாவட்ட கிளையை சேர்ந்தவர்கள் அந்த நகைக்கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரள எல்லையில் தமிழர்கள் மீதும் அவர்களுடைய வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்துபவர்களை கண்டித்தும், கேரள எம்.எல்.ஏ. கிருஷ்ணன்குட்டியை உடனடியாக கைது செய்யக்கோரியும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும் கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

கோ‌ஷங்கள் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடையின் உள்ளே செல்ல முயன்றனர். ஆனால், நகைக்கடையின் முன்பு பாதுகாப்பிற்காக நின்ற காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி கடையின் ‌ஷட்டரை மூடினார்கள். இதனால் காவலர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த பகுதியில் இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கடையை முற்றுகையிட்ட அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சதீஸ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட துணை செயலாளர் ஏழுமலை, மாணவரணி செயலாளர் சந்தோஷ், கொள்கை பரப்பு செயலாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். போராட்டம் குறித்து தகவல் அறிந்து நீண்ட நேரத்திற்கு பின் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அனுமதியின்றி நகைக்கடையை முற்றுகையிட்டதாக 12 பேரை கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர்.

மேலும் செய்திகள்