‘திறமைசாலிகளைக் கண்டறிய முயல்கிறோம்!’ -விளையாட்டுத் துறை மந்திரி

பள்ளிப் பருவத்தில் இருக்கும் இளம் திறமைசாலிகளுக்கு ‘கேலோ இந்தியா’ ஒரு நல்ல தளமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Update: 2018-02-24 07:39 GMT
மீபத்தில் நடைபெற்று முடிந்த தேசிய அளவிலான ‘கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுப் போட்டி’, குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

16 வகையான விளையாட்டுகளில், நாடு முழுவதிலும் இருந்து 3 ஆயிரத்து 298 இளம் வீரர்- வீராங்கனைகள் பங்கேற்றுத் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

பள்ளிப் பருவத்தில் இருக்கும் இளம் திறமைசாலிகளுக்கு ‘கேலோ இந்தியா’ ஒரு நல்ல தளமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

அதுகுறித்த விஷயங்கள், மற்றவை குறித்து, ஒலிம்பிக் முன்னாள் வெள்ளிப் பதக்க வெற்றியாளரும், மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத் துறை மந்திரியுமான ராஜ்யவர்தன் சிங் ரத்தோரின் பேட்டி...

‘கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுப் போட்டி’யைத் தொடங்கியதன் நோக்கம் என்ன?

“இளம் திறமையாளர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து வளர்ப்பதற்கு ஓர் அடிப்படைத் தளமாகத்தான் ‘கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுப் போட்டி’ தொடங்கப்பட்டிருக் கிறது. கடந்த பல ஆண்டுகளில், தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகள் பெயரளவுக்கு நடக்கும்படியாகி விட்டன. அதற்கான வசதிகளும் சிறப்பாக இல்லை. இந்நிலையில்தான், ‘கேலோ இந்தியா’ மூலம் இளம் வீரர்- வீராங்கனைகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். நம் நாட்டில் திறமைகளுக்குக் குறைவே இல்லை என்பது நமது பிரதமர் மோடி தொடர்ந்து சொல்லிவரும் கருத்து. அதன் அடிப்படையில், தகுதியுள்ள அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று அவர் எண்ணுகிறார். திறமைசாலிகளை வெகு சீக்கிரம் கண்டறிவதன் மூலமே அவர்களை மேலும் நன்றாக வளர்த்தெடுக்க முடியும். விளையாட்டு ஒரு நாட்டை உற்சாகப்படுத்துகிறது, ஒரு நாட்டின் பலமே இளையோர் பட்டாளம்தான் என்று பிரதமர் கூறுவார். துடிப்பான அந்தப் பட்டாளம், நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இருக்கிறது. இன்று ஜொலிக்கும் நமது விளையாட்டு நட்சத்திரங்கள் பலரும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள்தான். அதே அடிப்படையிலேயே, திறமையாளர்களை சீக்கிரமே கண்டுபிடித்து அவர்களுக்கு முறையான பயிற்சியளிக்க நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். அதற்கு, ‘கேலோ இந்தியா’ உதவும்.

இந்தியாவில் விளையாட்டில் திறமைகளுக்குக் குறைவில்லை என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விஷயம். வாய்ப்புகள்தான் குறைவு. அதைச் சரிசெய்ய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு, வசதிகளை ‘கேலோ இந்தியா’ வழங்க முயல்கிறது. இப்போட்டியின் மூலம், சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானத்தில் இளம் வீரர், வீராங்கனைகளை ஆட விடும்போது, ஒரு சர்வதேசப் போட்டியில் ஆடுவது எப்படி இருக்கும் என்று அவர்களால் உணர முடிகிறது. மாநிலங்களிலும், அடிப்படை விளையாட்டுக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் சூழலை நாம் உருவாக்க வேண்டும். அதற்கு, மாநிலங்களுக்கு இடையே ஓர் ஆரோக்கியமான போட்டி ஏற்பட வேண்டும்.

இந்தியாவில் கிரிக்கெட் அதீதப் புகழ்பெற்றுத் திகழும் நிலையில், எப்படி நம்மால் மற்ற விளையாட்டுகளையும் சரியான முறையில் வளர்க்க முடியும்?

இங்கே ஒவ்வொரு விளையாட்டுக்கும் அது அதற்கு உள்ள இடம் இருக்கிறது. கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளுக்கும் தொடங்கியுள்ள லீக் போட்டிகளும், அவற்றுக்குக் கிடைத்துவரும் ‘ஸ்பான்சர்ஷிப்’ ஆதரவும் ஒரு சாட்சி. தற்போது தொலைக்காட்சி சேனல்களில் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒளிபரப்பப்படுகின்றன, செய்தித்தாள்களும் அனைத்து வகையான விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் தருகின்றன. ஆசிய, காமன்வெல்த், ஒலிம்பிக் போட்டிகளில் நாம் பல்வேறு விளையாட்டுகளில் மேலும் பல பதக்கங்களை வெல்லும்போது அந்தந்த விளையாட்டுகள் ஊக்கம் பெறும்.

17 வயதுக்கு உட்பட்டோர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி போல தொடர்ந்து பல உலக அளவிலான போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுமா?

ஏற்கனவே அப்படிப்பட்ட உலக அளவிலான போட்டிகள் இந்தியாவில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நாட்டில், ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும் சர்வதேச அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையாவது ஒரு சர்வதேசப் போட்டி நடக்கிறது. நம் நாட்டு விளையாட்டுப் போட்டி அட்டவணைகளைக் கவனித்தாலே புரியும்.

நீங்களே ஒரு முன்னாள் ஒலிம்பிக் வீரர் என்ற முறையில், இன்றைய இளம் வீரர்- வீராங்கனைகளுக்குச் சொல்ல விரும்பும் அறிவுரை?

எப்போதும் நீங்கள் விளையாடும் விளையாட்டில் முழுக்கவனத்தைச் செலுத்திடுங்கள், உங்கள் பாதை, நம்பிக்கையில் இருந்து பார்வையை விலக்காதீர்கள். தங்கள் லட்சியங்களை நோக்கித் தொடர்ந்து உறுதியாக உழைத்துக்கொண்டிருப்பவர்களை தேடித்தான் வெற்றி வரும். அதற்கு வேறு எந்தக் குறுக்கு வழியும் கிடையாது! 

மேலும் செய்திகள்