கழுத்தை நெரித்துக் கொன்ற கொலையாளி யார்? போலீசார் தேடுதல் வேட்டை

நாகர்கோவிலில் போலீஸ் ஏட்டு மனைவி சாவில் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அவரை கழுத்தை நெரித்துக் கொன்ற கொலையாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2018-02-23 23:29 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் அறுகுவிளை திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ். போலீஸ் ஏட்டுவாக இருந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ராஜகுமாரி (வயது 75). இவர்களுக்கு ஜெபர்சன் என்ற மகனும், 6 மகள்களும் உள்ளனர். 6 மகள்களும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்கள். ஜெபர்சன் ஆசாரிபள்ளத்தில் வசிக்கிறார். ஜார்ஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் வீட்டில் ராஜகுமாரி மட்டும் வசித்து வந்தார்.

இந்த நிலையில் ராஜகுமாரி நேற்று முன்தினம் வீட்டில் பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்த வடசேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை பார்வையிட்டனர். ராஜகுமாரி பிணமாக கிடந்த இடத்தில் ரத்தக்கறை படிந்திருந்தது. ஆனால் உடலில் எந்த விதமான காயமும் தென்படவில்லை. இதன் காரணமாக அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றிய விவரம் முதலில் தெரியாமல் இருந்தது. அதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பினர்.

இதுதொடர்பாக ராஜகுமாரியின் மகன் ஜெபர்சன், தன் தாயின் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் மர்மச் சாவு என்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ராஜகுமாரியின் சாவில் மர்மம் இருப்பதாக கருதப்பட்டதால் பிரேத பரிசோதனை முடிவுகளை பெற போலீசார் தீவிரம் காட்டினர். இந்த நிலையில் ராஜகுமாரியின் உடல் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் நேற்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலை வாங்குவதற்காக உறவினர்கள் காத்திருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் பிரேத பரிசோதனை நடந்தது.

பரிசோதனை முடிவில், கழுத்தை நெரித்து ராஜகுமாரி கொலை செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியானது. அவரது கழுத்து பகுதியில் லேசான காயமும் ஏற்பட்டு இருப்பது பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. கழுத்து முழுவதும் ரத்தமாக இருந்ததால் போலீசாரால் அந்த காயத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிகிறது.

இதைத்தொடர்ந்து ராஜகுமாரி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது பற்றிய விவரங்களை போலீசார் சேகரிக்க தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை நடந்த ராஜகுமாரி வீட்டுக்கு நேற்றும் போலீசார் நேரில் சென்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் ராஜகுமாரிக்கு விரோதிகள் யாரேனும் உண்டா? அல்லது குடும்பத்தில் சொத்துப்பிரச்சினை, உறவினர்களுடன் தகராறு மற்றும் அக்கம் பக்கத்தினருடன் மோதல் இது போன்ற ஏதாவது சம்பவங்கள் நடந்ததா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ராஜகுமாரி தனியாக வசித்ததால் நகை, பணத்தை திருட வந்த மர்ம நபர்கள் அவரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.

இதற்கிடையே மர்மச் சாவு என்று பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது ‘ராஜகுமாரியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் மூச்சு விடமுடியாதபடி வாய் மற்றும் மூக்கையும் பொத்தி ராஜகுமாரி கொலை செய்யப்பட்டுள்ளார். ராஜகுமாரியை கொலை செய்த கொலையாளியை தீவிரமாக தேடி வருகிறோம்‘ என்றனர்.

முன்னாள் போலீஸ் ஏட்டு மனைவி ராஜகுமாரியின் சாவில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்