‘கங்கா கல்யாண்’ திட்டத்தில் ஆழ்குழாய் கிணறு தோண்டுவதில் முறைகேடு

‘கங்கா கல்யாண்’ திட்டத்தில் ஆழ்குழாய் கிணறு தோண்டுவதில் முறைகேடு நடந்துள்ளதாக ஷோபா எம்.பி. குற்றம்சாட்டினார்.

Update: 2018-02-23 23:04 GMT

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் ஷோபா எம்.பி. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

சமூக நலத்துறை மந்திரி ஆஞ்சனேயாவின் கீழ் செயல்படும் டாக்டர் அம்பேத்கர் மேம்பாட்டு கழகத்தில் ‘கங்கா கல்யாண்’ திட்டத்தில் பெரிய அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளன. மாநிலத்தின் 7 மண்டலங்களில் ரூ.36 கோடி செலவில் கங்கா கல்யாண் திட்டத்தின் கீழ் ஆழ்குழாய் கிணறுகளை தோண்டும்படி அவசரகதியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மந்திரி ஆஞ்சனேயாவின் ஹொலல்கெரே தொகுதியில் 1,800 ஆழ்குழாய் கிணறுகளை தோண்டும்படி உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அந்த தொகுதியில் மட்டும் ஒரே நாளில் ரூ.18 கோடி நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது. பெயருக்கு சில ஆழ்குழாய் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. அனைத்து ஆழ்குழாய் கிணறுகளும் போடப்பட்டதாக கூறி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

ஆழ்குழாய் கிணறு தோண்டும் நிறுவனங்களுக்கு கடந்த ஜனவரி 22–ந் தேதி ஒரே நாளில் 1,200 கிணறுகளை தோண்ட அனுமதி வழங்கப்பட்டது. டெண்டர் விதிமுறைகள் முழுமையாக மீறப்பட்டுள்ளன. ஏழை மக்கள் வசிக்கும் பகுதியில் இத்தகைய ஆழ்குழாய் கிணறுகளை தோண்டாமல், அந்த நிறுவனங்களுடன் மந்திரி ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு, கிணறுகளை தோண்டாமலேயே அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மந்திரி ஆஞ்சனேயா தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இதில் ரூ.5 கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடந்துள்ளதால், இதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு ஷோபா எம்.பி. கூறினார்.

மேலும் செய்திகள்