ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி கொலை வழக்கில் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேருக்கு திருவள்ளூர் மகளிர் விரைவு கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

Update: 2018-02-23 22:48 GMT
திருவள்ளூர்,

சென்னை மணலியை அடுத்த மாத்தூரை சேர்ந்தவர் சதாசிவம். ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவி மல்லிகா (வயது 45). முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த தனது சகோதரி தமிழ்ச்செல்வியுடன் கடந்த 3-12-2012 அன்று மல்லிகா வேலூர் சென்று விட்டு அன்று இரவு கோயம்பேடு வந்தார். அங்கிருந்து தமிழ்ச்செல்வி முகப்பேருக்கு பஸ்சில் சென்றுவிட்டார்.

பஸ் வர காலதாமதம் ஆனதால் ஒரு ஆட்டோவில் மல்லிகா ஏறினார். ஆட்டோவை வியாசர்பாடியை சேர்ந்த வெங்கடேசன் (33) ஓட்டி சென்றார். ஆட்டோ சிறிது தூரம் சென்றதும் வெங்கடேசன் தனது நண்பர்களான மலையனூரை சேர்ந்த பார்த்திபன் (32), மன்னார்குடியை சேர்ந்த சுதாகர் (32) ஆகியோரை போன் செய்து வரவழைத்தார்.

வெங்கடேசன் கூறிய இடத்துக்கு 2 பேரும் வந்தனர். பின்னர் மல்லிகா அணிந்திருந்த நகையை பறிக்க திட்டமிட்டு ஆட்டோவை வேறு இடத்துக்கு வெங்கடேசன் திருப்பினார். இது குறித்து மல்லிகா கேட்டபோது, 3 பேரும் மல்லிகாவின் வாயில் துணியை கட்டி கத்தியால் குத்தி கொலை செய்து அவர் அணிந்திருந்த 20 பவுன் நகை, வெள்ளி கொலுசு, செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர். பின்னர் அவரது உடலை புழல் அடுத்த வடபெரும்பாக்கம் அருகே வீசிவிட்டு ஆட்டோவில் தப்பிச்சென்றனர்.

இதனிடையே மல்லிகா வீட்டுக்கு சென்றாரா? என அறிய தமிழ்ச்செல்வி அவரது செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்ததால் சந்தேகத்தின் பேரில் செங்குன்றம் போலீசில் தமிழ்ச்செல்வி புகார் செய்தார். போலீசார் விசாரணையில் ஆட்டோ டிரைவர் வெங்கடேசன், அவரது நண்பர்கள் பார்த்திபன், சுதாகர் ஆகியோர் மல்லிகாவை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பரணிதரன், மேற்கண்ட 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

பின்னர் வெங்கடேசன், பார்த்திபன், சுதாகர் ஆகியோர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக தனலட்சுமி வாதாடினார்.

மேலும் செய்திகள்