சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 2 டன் போதை பொருட்கள் பறிமுதல்

திருவொற்றியூர் அருகே டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட்ட 2 டன் குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2018-02-23 22:30 GMT
திருவொற்றியூர்,

திருவொற்றியூரில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான கான்கார்டு கன்டெய்னர் யார்டில் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் இருப்பதாக திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் ரகுராம், இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அங்கிருந்த கன்டெய்னர் பெட்டி ஒன்றை சோதனை செய்தபோது அதில், 2 டன் எடையுள்ள குட்கா போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், டெல்லியில் இருந்து சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஜெய்அம்பா என்ற கடைக்கு கொண்டு செல்வதற்காக ரெயிலில் கன்டெய்னர் பெட்டி மூலம் போதை பொருட்கள் அனுப்பப்பட்டிருந்தது தெரியவந்தது.

ஏற்கனவே, அதே முகவரிக்கு கடந்த 5-ந் தேதி கொண்டு வரப்பட்ட 2 டன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக ராஜாஜி நகரை சேர்ந்த முகவர் சூர்யா (வயது 28) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்