கயிறு வியாபாரியை கடத்திய வழக்கில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பெங்களூருவை சேர்ந்த கயிறு வியாபாரியை கடத்திய வழக்கில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2018-02-23 22:45 GMT
சேலம்,

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் முகமது கவுஸ்(வயது 54). கயிறு வியாபாரி. இவர் எடப்பாடி, கொங்கணாபுரம் மற்றும் சேலம் மாநகரில் பல பகுதிகளில் கயிறு உற்பத்தியாளர்களிடம் இருந்து கயிறுகள் வாங்கி மொத்தமாக விற்பனை செய்து வருகிறார். முகமது கவுஸ் கடந்த ஆண்டு(2017) டிசம்பர் 30-ந் தேதி கயிறுகள் வாங்குவதற்காக ரூ.5 லட்சத்துடன் சேலம் அன்னதானப்பட்டிக்கு வந்தார். பின்னர் அவர் கயிறு உற்பத்தியாளர் ரவிச்சந்திரன் என்பவரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

நெத்திமேடு பகுதியில் சென்ற போது கத்தி முனையில் ஒரு கும்பல் அவருடைய மோட்டார் சைக்கிளை மறித்து வேனில் ஏற்றியது. பின்னர் அங்கிருந்து கடத்தி ஆட்டையாம்பட்டி அருகே கொண்டு சென்றது. அப்போது முகமது கவுஸ் அவர்களிடம் இருந்து நைசாக தப்பினார். முன்னதாக முகமது கவுசிடம் இருந்து ரூ.5 லட்சத்தை கடத்தல் கும்பல் தலைவனான இரும்பாலை கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த பிரபாகரன், வெங்கடேசன், காதல் மணி என்ற மணிமாறன், சேட்டு என்ற தரணிதரன், செந்தில்குமார், ரவிகிரண், மணிகண்டன் ஆகிய 7 பேரை அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் மீட்கப்பட்டது.

இந்த வழக்கில் கைதான பிரபாகரன், வெங்கடேசன் ஆகியோர் கடந்த 2016-ம் ஆண்டு சேலம் டவுன் போலீஸ் எல்லையில் 2 கூட்டுக்கொள்ளை வழக்கில் கைதாகி ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள். காதல்மணி என்ற மணிமாறன் மீது 2016-ம் ஆண்டு வழிப்பறி வழக்கில் அன்னதானப்பட்டியில் ஒரு வழக்கும், 2017-ம் ஆண்டு செவ்வாய்பேட்டை போலீஸ் எல்லையில் 2 பேரை தாக்கிய வழக்கும் கோர்ட்டு விசாரணையில் உள்ளது.

எனவே, மூவர்மீதும் தொடர் குற்ற வழக்குகள் உள்ளதாலும், பொதுமக்களின் பொதுஅமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டபடியால் சேலம் அன்னதானப்பட்டி போலீசார் அவர்களை ஓராண்டும் ஜாமீனில் வெளிவராத வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரைக்கு பரிந்துரை செய்தனர். அவர், மாநகர போலீஸ் கமிஷனர் சங்கருக்கு சிபாரிசு செய்தார். அதை ஏற்ற போலீஸ் கமிஷனர், தொடர் குற்ற வழக்கில் தொடர்புடைய பிரபாகரன், வெங்கடேசன், மணிமாறன் ஆகியோர் மீது நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்