அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்: 6 வக்கீல்கள் கைது

சிவகங்கை– திருப்பத்தூர் ரோட்டில் இருந்து புதிய நீதிமன்ற வளாகத்திற்கு செல்லும் தார்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக இருந்தது.

Update: 2018-02-23 21:30 GMT

சிவகங்கை,

சிவகங்கை– திருப்பத்தூர் ரோட்டில் இருந்து புதிய நீதிமன்ற வளாகத்திற்கு செல்லும் தார்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக இருந்தது. இதனால் இந்த சாலையை சீரமைக்க கோரி சிவகங்கை வக்கீல்கள் சங்கத்தினர் நேற்றுமுன்தினம் சிவகங்கை பஸ் நிலையம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பரமக்குடி செல்லும் அரசு பஸ் ஒன்று பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வெளியே வந்தது. இதைபார்த்த வக்கீல் சங்க செயலாளர் தங்கபாண்டியன் பஸ்சை நிறுத்த முயன்றபோது தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

இதைதொடர்ந்து பஸ் டிரைவர் செல்வராஜை வக்கீல்கள் சிலர் தாக்கினர். அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து டிரைவர் செல்வராஜ் அளித்த புகாரின்பேரில் சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வக்கீல்கள் தங்கபாண்டியன், மதி, ராஜாராம், வல்மிகிநாதன், செந்தில்குமார், வீரசிங்கம் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை சிவகங்கை மாஜிஸ்திரேட்டு லலிதா ராணி முன்பு ஆஜர் செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்