கப்பலூர் அரசுக் கல்லூரி மாணவிகள் திடீர் போராட்டம்
மதுரையை அடுத்துள்ள கப்பலூர் அரசுக் கல்லூரி மாணவிகள் திடீர் போராட்டம் நடத்தினர்.
திருமங்கலம்,
மதுரையை அடுத்துள்ள கப்பலூர் காந்தி நகரில் மதுரை காமராஜர் கல்லூரியின் உறுப்புக் கல்லூரி உள்ளது. இங்கு நேற்று காலையில் ஆங்கிலப் பிரிவு வகுப்பறையில் இருந்த ஜன்னல் கண்ணாடியை மற்றொரு பாடப்பிரிவு மாணவர்கள் உடைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஜன்னல் ஓரத்தில் இருந்த மாணவிகள் திடுக்கிட்டு எழுந்தனர். மேலும் காயமின்றி தப்பினர். எனவே கண்ணாடியை உடைத்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் கூறியுள்ளனர். ஆனால் இது குறித்து நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால் மாணவிகள் திரண்டு கல்லூரி வகுப்பறை வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் கல்லூரி முகப்பு வாசலுக்கு வந்து அமர்ந்து போராட்டம் நடத்தினர்.