பணம் செலுத்தி 2 ஆண்டுகள் ஆகியும் தோட்டங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை, விவசாயிகள் புகார்

பணம் செலுத்தி 2 ஆண்டுகள் ஆகியும் தோட்டங்களுக்கு மின்இணைப்பு வழங்கப்படவில்லை என்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் புகார் அளித்தார்கள்.

Update: 2018-02-23 22:00 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை நடந்து வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார்.

காலை 10 மணி முதல் 11.30 மணி வரை விவசாயிகள் மனுக்கள் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் குறித்து பேசியதாவது:-

தாளவாடி, பர்கூர், ஆசனூர் ஆகிய மலைப்பகுதிகளில் ராகி பயிரிடப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்து வருகிறார்கள். எனவே வேளாண் துறை அல்லது கூட்டுறவு சங்கம் மூலம் ராகி கொள்முதல் நிலையம் அமைத்து கொடுக்க வேண்டும். இதேபோல் மரவள்ளிக்கிழங்கு அதிகமாக உள்ள பகுதிகளில் மையமாக அரவை ஆலை தொடங்க வேண்டும். மலைப்பகுதிகளில் 2 ஆயிரம் அடி வரை ஆழ்குழாய்கிணறு அமைத்து தண்ணீர் எடுத்து பணப்பயிர்கள் பயிரிட்டு வருகிறார்கள். இதனால், வனப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும், வன விலங்குகளுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க வேண்டும். மேலும் மணியாச்சிசிபள்ளம் ஓடையை சமவெளிக்கு திரும்பும் திட்டத்தை கைவிட வேண்டும்.

விவசாய தோட்டங்களுக்கு இலவசமாக மின் இணைப்பு வழங்கப்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து ரூ.10 ஆயிரம் கொடுத்தால் விவசாய தோட்டத்துக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும் என்று கூறினார். பின்னர் மின் இணைப்பு வழங்க ரூ.50 ஆயிரம் வரை வாங்கினார்கள். இதற்காக விவசாயிகள் பணம் செலுத்தி 2 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மேலும் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

தற்போது தட்கல் முறையில் மின் இணைப்பு வேண்டி விவசாயிகள் ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை கொடுத்துள்ளனர். இதற்காக விண்ணப்பித்து கடந்த 6 மாதங்கள் ஆகியும் இன்னும் ஒரு விவசாயிகளுக்கு கூட மின் இணைப்பு வழங்கப்படவில்லை. எனவே மின் இணைப்பு வழங்க மின்சாரத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலிங்கராயன் வாய்க்காலில் கருங்கல்பாளையத்தில் இருந்து வெண்டிபாளையம் வரை சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் கான்கிரீட் தளம் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் ஈரோடு மாநகர் பகுதிகளில் வெளியேறும் சாக்கடை மற்றும் சாயக்கழிவுகள் நேரடியாக வாய்க்காலில் கலந்து வருகிறது. இதனை தடுக்க காலிங்கராயன் வாய்க்காலில் உடனடியாக கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும். மேலும் வலது, இடது கரைகளை பலப்படுத்தி, மதகுகள் உள்ள பகுதிகளில் வால்வுகள் அமைத்தால் தண்ணீர் வீணாவதை தடுக்கலாம்.

கீழ்பவானி வாய்க்கால் ஒற்றை மதகுகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக உயிர்நீர் திறக்கப்படவில்லை. இதனை மீண்டும் பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பெருந்துறை முதல் விஜயமங்கலம் வரை தேசிய நெடுஞ்சாலைகளில் இணைப்பு சாலைகள் இல்லாததால் அதிக அளவில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க விரைந்து இணைப்பு சாலைகள் அமைக்க வேண்டும். சொட்டு நீர் பாசனத்திற்கு ரூ.40 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைப்பதற்கு முன்பாக விவசாயிகளிடம் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நகையை வைத்து பணம் வாங்கிய விவசாயிகள் பணத்தை திருப்பி செலுத்திய பிறகும் நகைகளை கொடுக்க வங்கி மறுக்கிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவின் நிர்வாகம் சார்பில் தயாரித்த பால்கோவா தரம் குறைவாக உள்ளது. இதனை உனடியாக சரிசெய்ய வேண்டும்.

சக்தி சர்க்கரை ஆலை, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.6 கோடியை விரைந்து வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு கலப்பு தீவனம் மானிய விலையில் வழங்க வேண்டும். விவசாய பொருட்களை ஆன்-லைனில் வர்த்தகம் செய்வதை தடை செய்ய வேண்டும். இவ்வாறு விவசாய சங்க பிரதிநிதிகள் பேசினார்கள்.

இதற்கு துறை சார்ந்த அதிகாரிகள் பதில் அளித்து பேசினார்கள்.

மேலும் செய்திகள்