பெற்றோர் கண்டித்ததால் வீட்டில் விஷம் குடித்து விட்டு பள்ளிக்கு வந்த மாணவன்

கும்பகோணத்தில், பெற்றோர் கண்டித்ததால் வீட்டில் விஷம் குடித்து விட்டு பள்ளிக்கு வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் மயங்கி விழுந்தான். ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2018-02-23 23:30 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவில் மாத்தூரை சேர்ந்தவர் சந்திரசேகர்். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களது மகன் சக்திவேல்(வயது 15). இவன், கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான்.

சக்திவேல், பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு பள்ளிக்கு வராமல் தினமும் நண்பர்களுடன் சேர்ந்து வெளியில் சுற்றித்திரிவதாக பள்ளியில் இருந்து அவனது பெற்றோருக்கு புகார்் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று காலை அவனது பெற்றோர் சக்திவேலை கண்டித்துள்ளனர்.

பெற்றோர் தன்னை திட்டியதால் மனம் உடைந்த சக்திவேல், நேற்று காலையில் பள்ளிக்கு கிளம்புவதற்கு முன்பு வீட்டில் இருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து விட்டு பள்ளிக்கு சென்றான். அங்கு வழக்கம்போல் வகுப்பறையில் சக மாணவர்களுடன் அமர்்ந்து பாடத்தை கவனித்து கொண்டு இருந்தான். அப்போது அவன் திடீரென வாந்தி எடுத்து வகுப்பறைக்குள் மயங்கி விழுந்தான். அதனை பார்த்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஓடிச்சென்று இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் சக்திவேலை உடனடியாக கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்். அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மாணவனின் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகத்தினர்் தகவல் தெரிவித்தனர்். அதன்பேரில் சக்திவேல் சேர்க்கப்பட்ட தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்த அவர்கள் சக்திவேலை கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர். அங்கு அவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்