திடீர் மாரடைப்பால் டிரைவர் சாவு; பெட்டிக்கடை மீது சரக்கு வேன் மோதியது

சென்னிமலை அருகே திடீர் மாரடைப்பால் டிரைவர் இறந்ததுடன், அவர் ஓட்டி வந்த சரக்கு வேன் ரோட்டோர பெட்டிக்கடை மீது மோதியது. இதில் பொதுமக்கள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-02-22 22:00 GMT
சென்னிமலை,

ஈரோடு மாவட்டம் சென்னிமலை கருப்பண்ணகோவில் பள்ளம் திருநகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 34). டிரைவர். இவருடைய மனைவி பிரியா (24). இவர்களுடைய மகள் தனுஷ்கா (6). செந்தில்குமார் அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருடைய சரக்கு வேனை ஓட்டி வந்தார்.

இந்த நிலையில் திருப்பூரில் இருந்து சரக்கு வேனை செந்தில்குமார் நேற்று ஓட்டி வந்தார். சென்னிமலையை அடுத்த பள்ளக்காட்டுபுதூர் அருகே சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது.

அப்போது செந்தில்குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் இறந்தார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன், எதிர்பாராதவிதமாக ரோட்டோரத்தில் உள்ள சொக்கலிங்கம் (43) என்பவரின் பெட்டிக்கடை மீது மோதியது அப்போது பெட்டிக்கடைக்குள் இருந்த சொக்கலிங்கத்தின் மனைவி சரஸ்வதி (35) சுதாரித்து கொண்டு தன்னுடைய மகன் தினேசை (5) தூக்கிக்கொண்டு கடையை விட்டு ஓடி உயிர் தப்பினர். மேலும் கடையின் அருகில் நின்று கொண்டிருந்த பொதுமக்களும் அலறியடித்தபடி ஓடினார்கள்.

இதுபற்றி அறிந்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘திருப்பூரில் இருந்து சரக்குவேனில் செந்தில்குமார் வரும்போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் வரும்போது வழியில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாரடைப்புக்கான மாத்திரையை வாங்கி சாப்பிட்டுவிட்டு வந்து உள்ளார்.

இந்தநிலையில் சென்னிமலையை அடுத்த பள்ளக்காட்டுபுதூர் அருகே வந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து உள்ளார்.

இதனால் தான் சரக்கு வேன் கட்டுப்பாட்டை இழந்து பெட்டிக்கடைமீது மோதி உள்ளது,’ தெரிய வந்தது. இதுபற்றி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்