லாரி மோதி ரெயில்வே கேட் உடைந்தது போக்குவரத்து பாதிப்பு

குளித்தலையில் லாரி மோதி ரெயில்வே கேட் உடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-02-22 22:45 GMT
குளித்தலை,

குளித்தலை- மணப்பாறை சாலையில் குளித்தலை சுங்ககேட் அருகே ரெயில்வே கேட் ஒன்று உள்ளது. இந்த ரெயில்வே கேட் குழாய் வடிவில் மேலும் கீழும் தூக்கி இறக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தினசரி இவ்வழியாக ரெயில்கள் வரும்போது இந்த ரெயில்வே கேட் கீழே இறக்கப்பட்டு சாலையின் இரு புறமும் வாகனங்களை செல்லவிடாமல் தடுக்கப் படும். ரெயில் சென்ற பிறகு மீண்டும் இது மேலே தூக்கப்படும். இதன் பின்னர் வாகனங்கள் தண்டவாளத்தை கடந்து செல்லும்.

இந்த நிலையில் நேற்று காலை 11.30 மணியளவில் சிறப்பு ரெயில் ஒன்று வந்தது. இதற்காக அந்த ரெயில்வே கேட் பூட்டப்பட்டது. ரெயில் சென்ற பின்னர் கேட் மீண்டும் திறக்கப்பட்டது. கேட் முழுமையாக திறக்கும் முன்பு அங்கு நின்று கொண்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் ஏற்றிச்சென்ற லாரியின் டிரைவர் தண்டவாளத்தை கடப்பதற்காக வேகமாக செல்ல முயன்றார். அப்போது ரெயில்வே கேட்டில் லாரி மோதியதில் ரெயில்வே கேட் உடைந்தது. இதைப் பார்த்த லாரி டிரைவர் லாரியை விரைவாக இயக்கி சென்றார். இதைப்பார்த்த அங்கிருந்த ரெயில்வே ஊழியர் மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்று குளித்தலை- கோட்டமேடு செல்லும் வழியில் லாரியை மடக்கி பிடித்தார்.

இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடைந்து கிடந்த ரெயில்வே கேட்டை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் ரெயில்வே கேட்டின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். கேட் உடைந்தது குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடைந்த ரெயில்வே கேட்டை சரிசெய்யும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ரெயில் வரும்போது வாகனங்கள் செல்லாத வகையில் இரும்பு சங்கிலியை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டன. சில மணி நேரத்திற்கு பிறகு உடைந்த ரெயில்வே கேட் சரிசெய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இச்சம்பவத்தால் குளித்தலை- மணப்பாறை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்