சட்டமன்ற உறுதிமொழிக்குழு ஆய்வுக்கூட்டம் கலெக்டர் கோவிந்தராஜ் முன்னிலையில் நடந்தது

கரூரில் சட்டமன்ற உறுதிமொழிக்குழு ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் முன்னிலையில் நடந்தது.

Update: 2018-02-22 22:30 GMT
கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற உறுதிமொழிக்குழு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற அரசு உறுதிமொழிக்குழு தலைவர் ராஜா (சங்ககிரி எம்.எல்.ஏ.) தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். இதில் சட்டமன்ற உறுதிமொழிக்குழு உறுப்பினர்களான திருப்பூர் (தெற்கு) எம்.எல்.ஏ. குணசேகரன், திருவையாறு எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகரன், திரு.வி.க.நகர் (சென்னை) எம்.எல்.ஏ. சிவகுமார் என்கிற தாயகம் கவி, மேலூர் எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் என்கிற செல்வம், திருக்கோயிலூர் எம்.எல்.ஏ. பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் கரூர் மாவட்டம் சார்ந்த உறுதிமொழிகளான மாயனூரில் செயல்பட்டு வந்த ஆஸ்பெடாஸ் தொழிற்சாலை பணி, நொய்யல் ஆற்றில் ஆறு மாதம் காளிங்கராயன் வாய்க்கால் நீரின் அளவு தன்மையை தொடர்ந்து கண்காணித்தல், நொய்யல் ஆற்றுப்பாசன பகுதியில் சாயக்கழிவு நீரினால் மாசுபட்ட நிலங்களில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் வனத்தோட்ட கூழ்மரக்கன்றுகளை நடவு செய்தல், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் மலைப்பகுதிக்கு ரோப்கார் வசதி செய்தல், பயணிகள் நிழற்கூடம், கழிப்பறை, குடிநீர் வசதி, கடைகள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் அமைத்தல், கிருஷ்ணராயபுரம் வட்டம் சங்கமலைப்பட்டியில் 230 கிலோ துணை மின் நிலையம் அமைத்தல், கரூரில் கூட்டு உள்ளூர் திட்டக்குழு அலுவலகம் அமைக்கும் பணி, கரூரில் ஆயுத படைக்கென தனியாக நிர்வாக அலுவலகம் கட்டும் பணி, குளித்தலை, மஞ்சம்பட்டி, கொட்டியாம்பட்டி, மேலமேட்டுப்பட்டி, சங்காய்ப்பட்டி, தோகைமலை, நெசவாளர் காலனி, பிள்ளை கோடங்கிபட்டி, கம்பந்தம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் அங்கன்வாடி மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட 37 உறுதிமொழிகள் மீது ஆய்வுக்குழுவால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வுக்கூட்டத்தின் முடிவில் உறுதிமொழிகள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு விடவும் குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உரிய துறையினரிடம் ஆலோசனை வழங்கினர்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் பேசியதாவது:-

நிதிக்குழு, மனுக்கள் குழு, கணக்கு குழு, பொது நிறுவனங்கள் குழு, உறுதிமொழிக்குழு என 12 வகையான தமிழ்நாடு அரசு சட்டமன்றப்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் தமிழ்நாடு அரசு உறுதிமொழிக்குழுவால் நம் மாவட்டத்தில் உள்ள 37 உறுதிமொழிகள் மீது இன்று (நேற்று) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெரும்பாலான பணிகள் முடிவுற்று செயல்பாட்டிலுள்ளது. மீதமுள்ள பணிகளும் உறுதிமொழிக்குழுவின் ஆலோசனைக்கு இணங்க விரைந்து முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து கரூரில் ரூ.3 கோடியே 6 லட்சத்தில் ஆயுதப்படைக்கென தனியாக அமைக்கப்பட்டு வரும் நிர்வாக அலுவலக கட்டிட கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தனர்.

இதில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், அரசு உறுதிமொழிக்குழு அலுவலர்களான செயலாளர் பூபதி, இணை செயலாளர் சுப்பிரமணியம், சார்புச் செயலாளர் சுஜாதேவி, தனித்துணை கலெக்டர் சமூக பாதுகாப்புத்திட்டம் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்