பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்படும் போலீஸ் வாகனம்

விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் நாள் முழுவதும் பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்படும் போலீஸ் வேனை பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் நிறுத்துவதற்கு மாவட்ட போலீஸ் நிர்வாகம் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

Update: 2018-02-22 22:30 GMT
விருதுநகர்,

விருதுநகர் பழைய பஸ் நிலையம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் அனைத்து டவுன் பஸ்களும் நகரின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிக்கு செல்லும் புறநகர் பஸ்களும் இந்த பஸ் நிலையத்துக்கு தான் வந்து செல்கின்றன.

இந்த பஸ் நிலையத்தின் மேற்குப் பகுதியில் போக்குவரத்து கழக அலுவலகம் உள்ள நிலையில், போக்குவரத்து கழக அதிகாரிகளின் வாகனங்கள் மற்றும் பழுது நீக்க வரும் போக்குவரத்து கழக பஸ்கள் போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு நிறுத்தப்படுகிறது.

கிராமங்களில் இருந்து வரும் மாணவ-மாணவிகள் உள்பட அனைவரும் தங்கள் ஊருக்கு செல்லும் பஸ்களுக்காக பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் உள்ள இடத்தில் தான் காத்திருக்கும் நிலை உள்ளது. ஏனெனில் பஸ் நிலையத்தில் வடபுற வாசல் வழியாக பஸ்கள் வருவதால் அதனை பார்க்க வசதியாக கிழக்கு பகுதியில் நின்று தங்கள் ஊர் பஸ்கள் வந்தவுடன் அதில் ஏறும் நிலை இருந்து வருகிறது. சில நேரங்களில் தங்கள் ஊர்களுக்கு வரும் பஸ்கள் வர தாமதம் ஆனால் அந்த பகுதியிலேயே நீண்ட நேரம் காத்திருந்து அதன் பின்னர் பஸ் வரும் போது ஏறிச் செல்லும் நிலை உள்ளது.

இந்த நிலையில் பஸ் நிலைய கிழக்குப் பகுதியில் பஸ்களுக்காக பயணிகள் காத்திருக்கும் இடத்திற்கு முன்பு போலீஸ் வேன் ஒன்று காலை முதல் இரவு வரை நிறுத்தி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் தங்கள் ஊர்களுக்கான பஸ்களை பார்க்க முடியாமல் தவிப்புக்குள்ளாகி வருகிறார்கள்.

போலீஸ் வேனை பயணிகள் நிற்கும் இடத்திற்கு முன்பு நிறுத்தி வைப்பது அவர்களுக்கு பெரும் இடைஞ்சலாக உள்ளது. இந்த போலீஸ் வேனில் பஸ் நிலைய பாதுகாப்புக்காக போலீசார் வருவதாக கூறப்பட்டாலும் பல சந்தர்ப்பங்களில் அவர்களை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டிய நிலை உள்ளது.

எது எப்படி இருந்தாலும், பஸ் நிலையத்தில் பாதுகாப்புக்காக போலீசாரை முழு நேரம் பணியில் ஈடுபட வைக்கலாமே தவிர போலீஸ் வேனை அங்கு நாள் முழுவதும் நிறுத்தி வைப்பது பஸ் போக்குவரத்துக்கும், பயணிகளுக்கும் அவதி ஏற்படுத்துவதாகத்தான் இருக்கும். எனவே போலீஸ் வேனை பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் தனி இடத்தில் நிறுத்துவதற்கு மாவட்ட போலீஸ் நிர்வாகம் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்