மாணவ-மாணவிகளுக்கு தேர்வு அனுமதி சீட்டு வழங்கும் பணி மும்முரம்

பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு அனுமதி சீட்டு வழங்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2018-02-22 23:00 GMT
கோவை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த மாதம் 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வை கோவை கல்வி மாவட்டத்தில் 121 மையங்களில், 2 ஆயிரத்து 70 தனித்தேர்வர்களுடன், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படிக்கும் 38 ஆயிரத்து 903 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

அடுத்த மாதம் 1-ந் தேதி பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் இதற்கான ஆயத்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை வந்தது. அதனை பாதுகாப்பதற்காக 10 கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் தேர்வு எழுதுபவர்களின் விவரங்களை குறிக்கும் முகப்பு தாளுடன், விடைத்தாளை இணைக்கும் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்தன. அந்த பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவதற்கான அனுமதி சீட்டு (ஹால்டிக்கெட்) அந்தந்த பள்ளிகளில் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து வழங்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த தேர்வு அனுமதி சீட்டில் மாணவ-மாணவிகளின் புகைப்படம், தேர்வு குறித்த விவரம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்று உள்ளன. மேலும் இந்த தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளை கண்காணிக்கும் பணியில் முதன்மை கண்காணிப்பாளர்கள், கல்வித்துறை அதிகாரிகள், அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை உறுப்பினர்கள், வழித்தட அலுவலர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 800 பேர் ஈடுபட உள்ளனர்.

இதில் மாணவ-மாணவிகள் காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோவை ராஜவீதியில் உள்ள துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 578 பிளஸ்-2 மாணவிகளுக்கு நேற்று தேர்வு அனுமதி சீட்டு வழங்கப்பட்டது.

இதனை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரசேகர் வழங்கினார். இதேபோல் கோவையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தேர்வு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்