தூத்துக்குடியில் பரபரப்பு: போலீசார்–மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மீண்டும் மோதல் சப்–இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

தூத்துக்குடியில் போலீசார்–மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

Update: 2018-02-22 20:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் போலீசார்–மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

போலீசாருடன் மோதல்

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில மாநாட்டையொட்டி தொண்டர்கள் அணிவகுப்பு நடந்தது. அப்போது, தூத்துக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தலைமையிலான போலீசாருக்கும், அணிவகுப்பில் வந்த அந்த கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீசார் தாக்கியதில் சிறுவன் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். தொண்டர்கள் தாக்கியதில் 2 போலீசார் காயம் அடைந்தனர்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த விமல், விஷ்ணுவர்த்தன் மற்றும் சிலர் மீது தென்பாகம், மத்தியபாகம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தொண்டர்களை தாக்கிய உதவி போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் அறிவித்து உள்ளனர்.

வாக்குவாதம்

அதன்படி, தூத்துக்குடி தாளமுத்துநகரில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனுமதி பெறுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சங்கரன் நேற்று முன்தினம் இரவு தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று உள்ளார். அப்போது, அங்கு இருந்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சந்திரமூர்த்தி, அவரை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இந்த மோதல் பற்றி தகவல் அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து தலைமையில் நிர்வாகிகள் தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் போலீசாரை கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் மீண்டும் நடந்த இந்த மோதலால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதைத்தொடர்ந்து தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாராணி மற்றும் போலீசார் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில், அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ஆயுதப்படைக்கு மாற்றம்


இதனை அறிந்த போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் விசாரணை நடத்தி, போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சந்திரமூர்த்தியை ஆயுதப்படைக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டார். சப்–இன்ஸ்பெக்டர் சந்திரமூர்த்தி ஏற்கனவே தெர்மல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போது, கம்யூனிஸ்டு கட்சியினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்