18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு திருமணம் செய்தால் நடவடிக்கை நீதிபதி ராமலிங்கம் எச்சரிக்கை

நெல்லையில் குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் குறித்த கருத்தரங்கு நடந்தது.

Update: 2018-02-22 21:30 GMT
நெல்லை,

நெல்லையில் குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் குறித்த கருத்தரங்கு நடந்தது.

கருத்தரங்கு

நெல்லை கோர்ட்டு வளாகத்தில் குழந்தை திருமண தடுப்பு சட்டம் குறித்த கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் தலைமை தாங்கி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் தேவ் ஆனந்த் வரவேற்று பேசினார்.

வக்கீல் பழனி, குழந்தை திருமண தடுப்பு சட்டம் குறித்து விளக்கம் அளித்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் நீதிபதி ராமலிங்கம் குழந்தை திருமணத்தை தடுப்பது மற்றும் மறுவாழ்வு பணிகள் குறித்து பேசினார். இளம் சிறார் குழும தலைவர் பிஸ்மிதா கடமைகள், பொறுப்புகள் குறித்தும் பேசினார்.

இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) இளம் பகவத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) கார்த்திக் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் கார்த்திகா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு துறையினர் செய்திருந்தனர்.

நடவடிக்கை

மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் பேசுகையில், ‘‘2006–ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குழந்தை திருமண தடுப்பு சட்டத்துக்கு பிறகு பெண் குழந்தைகள் திருமணம் அதிகளவு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 18 வயது முடிந்த பிறகே திருமணம் செய்து வைக்க வேண்டும். அதை மீறி திருமணம் செய்தால் சட்டப்படி குற்றம் ஆகும். அவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’’ என்றார்.

நீதிபதி ராமலிங்கம் கூறுகையில், ‘‘நெல்லை மாவட்டத்தில் கடந்த 2017–ம் ஆண்டில் 49 சிறுமிகள் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு இதுவரை 4 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளன. தமிழகத்தில் குழந்தை திருமணம் நடப்பதில் நெல்லை மாவட்டம் 4–வது இடத்தில் உள்ளது. எனவே குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தவும், அது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 18 வயது பூர்த்தி அடையாத குழந்தைகளுக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் ஆகும். இதை மீறி செயல்படுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

மேலும் செய்திகள்